அரபிக் கடலில் உருவான.. 2025ம் ஆண்டின் முதல் புயல்.. அச்சுறுத்தும் சக்தி.. மும்பைக்கு எச்சரிக்கை!
மும்பை: அரபிக் கடலில் இந்த ஆண்டு உருவான முதல் புயல் என்ற பெருமையை சக்தி புயல் பெற்றுள்ளது.
சக்திபுயல் துவாரகாவிற்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 250 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சனிக்கிழமைக்குள் ஒரு தீவிர புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் இந்திய நிலப்பரப்பில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சக்தி புயல் ஒரு தீவிர புயலாக வலுப்பெற்றாலும், குஜராத் கடற்கரையை நெருங்குவதற்கு முன்பே கணிசமாக வலுவிழக்கும். "இந்த அமைப்பு ஒரு தீவிர புயலாக வலுப்பெற்றாலும், குஜராத் கடற்கரையை நெருங்குவதற்கு முன்பே கணிசமாக வலுவிழக்கும். குஜராத்தின் சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இந்தியாவில் பெரிய பாதிப்பு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை, என்று Vagaries of Weather என்ற வானிலை வலைப்பதிவர் கூறியுள்ளார்.
அதேசமயம், மும்பையில் கன மழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் பாதை இந்திய நிலப்பரப்பில் இருந்து விலகிச் செல்கிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. IMD தகவல்படி, அக்டோபர் 3 ஆம் தேதி பிற்பகல் வரை வடமேற்கு அரபிக்கடல், அதை ஒட்டிய வடகிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் கடல் நிலைமைகள் மிகவும் கொந்தளிப்பாக இருந்தன. அக்டோபர் 4 முதல் 6 ஆம் தேதி வரை கடல் நிலைமைகள் மிகவும் கொந்தளிப்பாக மாறும்.
குஜராத்-வடக்கு மகாராஷ்டிரா மற்றும் பாகிஸ்தான் கடற்கரைகளில் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 3 முதல் 6 ஆம் தேதி வரை, மீனவர்கள் வடமேற்கு அரபிக்கடல், அதை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், மற்றும் குஜராத்-வடக்கு மகாராஷ்டிரா கடற்கரைகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஒடிசாவின் உட்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால், அக்டோபர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மத்திய மகாராஷ்டிரா மற்றும் மராத்வாடாவின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று IMD மேலும் கூறியுள்ளது.