D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!

Su.tha Arivalagan
Oct 11, 2026,12:41 PM IST

- த. ரஜிதா


காத்துக் கொண்டிருந்தேன்

காற்றுடன் பேசிக்கொண்டு,

கண்களைச் சுழல விட்டு,

கடைகளை நோட்டமிட்டு,

காத்துக்கொண்டிருந்தேன்

பேருந்து நிலையத்தில்.


வந்து கொண்டிருந்தன

ஆட்களை அள்ளிக்கொண்டு,

ஆபத்தின் உச்சியைத் தொட்டு,

அன்றைய மாலையை விட்டு

ஆதவன் மறைவதைப் போல்

வந்து கொண்டிருந்தன...

எத்தனையோ பேருந்துகள்.




மெதுவாய் வந்தது அது

அமைதியின் பெருமையை உணர்த்தி,

ஆரவாரத்தின் ஆணவத்தைத் துரத்தி,

அழகின் நிலையில்லாமையை உணர்த்தி,

அன்பின் அழகை விளக்கி,

மெதுவாய் வந்தது அந்தப் பேருந்து.


மின்னலாய் மறைந்தது

நான் என்னை நினைவில் நிறுத்தி,

கனவில் கண்டவற்றை விலக்கி,

சென்றவைகளைச் சீர்தூக்கி,

'என்னுடையது' என்று உணரும் முன்,

மின்னலாய்த் தான் மறைந்தது...

அந்தப் பேருந்து.


என் பேருந்து.


விட்டு விட்டேன் கைநழுவிப் போன அதை

காலம் கடத்திய நான்,

கிடைத்தது அவ்வளவுதான் என்றெண்ணி,

ஒன்று போனால் மற்றொன்று

என்று விட்டுவிட்டேன்

கவலை தெரியாமல் விட்டுவிட்டேன்.


காத்துக் கொண்டிருந்தேன்...

மறுபடியும் வேறொரு பேருந்திற்காக

காத்துக் கொண்டிருந்தேன்

நான் காத்துக் கொண்டிருந்தேன்.


காத்துக் கொண்டே இருந்திருப்பேன்...

கண்களின் நீரைச் சுண்டி விட்டு,

காலம் கடந்ததை மறந்து விட்டு,

கவலை ரேகையைப் படர விட்டு,

கவிதை மலர்களை நுகர்ந்து விட்டு,

காத்துக் கொண்டே இருந்திருப்பேன்...

அது பேருந்தாய் மட்டும் இருந்திருந்தால்,

வேறொன்று வரும் என்று

காத்துக் கொண்டே இருந்திருப்பேன்.


ஆனால் இப்பொழுது...

விட்டதைப் பிடிக்க எண்ணி,

மடத்தனமாய் நம்பிக்கை கொண்டு,

காத்துக் கொண்டிருக்கிறேன்...

வாழ்க்கைப் பயணத்தில்.


(த.ரஜிதா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை)