என் வழி!

Su.tha Arivalagan
Oct 06, 2026,02:53 PM IST

- டி.ரஜிதா


நேர் வழியில் 

சென்று கொண்டிருந்த 

நான் 

வளைந்து நெளிந்து செல்லும் 

வாழ்க்கைப் பாதையில் 

வழுக்கிச் செல்ல வளர்க்கப்பட்டேன்.


அதைக்கூட  வேறு வழியில்லாமல் 

வழக்கப்படுத்திக் கொண்டேன்.


குட்டக் குட்ட குனியவும் 

கூப்பிட்டக் குரலுக்கு ஓடவும் 

குழைந்து குழைந்து பேசவும்

குட்டிக் கரணம் அடிக்கவும் 

குரங்கு போல் தாவவும்

சுட்டுப் போட்டாலும் 

கூட முடியவில்லை.

எனக்குள் இருக்கும் 

நேர்மை எனக்கே 

பிடிக்கவில்லை.




சுருக்கென்று பேசுபவர்களிடம் 

நறுக்கென்று பதிலுரைக்கும் 

நாவை மட்டுமாவது 

கட்டுக்குள் கொண்டுவர 

கற்றுக்கொள்ள வேண்டும்.


காரணம்.......

நித்தமும் சண்டையிட்டு 

நிதானம் தவறி 

நிம்மதி இழக்க விரும்பவில்லை.

நினைப்பதை எழுதி 

நிதமும் தமிழ்ப் பால் குடித்து 

நிச்சயம் வெற்றி 

பெறவே பிறந்திருக்கிறேன்.


சூரியன் சுட்டெரித்தாலும் 

நிலவொளியில் குளிர்காய்ந்து 

நின்று காலூன்றி 

களை எடுப்பேன்.

கரைந்துவிடமாட்டேன்.


என் வழி, 

வலியால் வரைந்தது.

வளியாய் சுழன்றது.

வளைந்தவர்களை பார்த்து 

வியந்ததில்லை.

வளையாத வாழ்வை 

விழைந்திருக்கிறேன்.


புகழ் என்னை குழைத்ததில்லை,

பொய்மையை அருகில் அழைத்ததில்லை.

புரியாதவர்க்கு 

விளக்கியதுமில்லை.


தமிழ் எனது உயிர்ச்சொல்.

தன்னம்பிக்கை எனது 

கடவுச்சொல்.

மௌனம் எனது கேடயம்,

எழுத்து எனது ஆயுதம்.


விழுந்தாலும் என் வழியில் விழுவேன்,

எழுந்தாலும் என் வழியில் எழுவேன்,

இது தான் என் வழி.


(ரஜிதா த, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை)