அடை காக்கும் தாய்க் கோழியாய் .. ஆசானுக்கு வாழ்த்துரை!
- த. ரஜிதா
தாய்த் தமிழுக்கு வணக்கம்.
தங்கத் தமிழ் ஆசானுக்கு வணக்கம்.
ஆன்றோர் அனைவருக்கும் வணக்கம்.
ஆங்கில ஆசிரியை நான்.
அன்னைத் தமிழில் வாழ்த்துரை வழங்க வந்திருக்கிறேன்.
எதுகை மோனை எனக்குத் தெரியாது.
ரைமிங் வேர்ட்ஸ் மட்டுமே நானறிவேன்.
தவறிருந்தால் முக்கண் முதல்வனாய்
நெற்றிக் கண் காட்டாமல்
தருமியாய் நினைத்து மன்னித்தருள்வீர் அய்யா.
கடையேழு வள்ளல்கள் கண்டதில்லை நாம்.
எட்டாம் வள்ளல் எம்மிடமுண்டு.
எட்டிப் பார்க்கும் அவசியமில்லை.
எதிரில் தான் இருக்கிறார்
எங்கள் இமயம்.
வாருங்கள் வாழ்த்துவோம்
எம் ஆசானை.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை –
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இரண்டு உலகமும் ஒருங்கே பெற்ற அருள்தாசர் இருக்கும் எங்கள் ஊர் மதுரமங்கலம்.
ஆசானை வாழ்த்துவதும் அன்னையை வணங்குவதும் ஒன்றே.
ஏன் தெரியுமா?
அவர்
அன்னையாய் மாறி
அனைத்து மாணாக்கருக்கும்
நிலவேம்பு கஷாயம்
ஊட்டும் அன்பாளர்.
நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் தானே ஏறி
சோதனை செய்யும் அருளாளர்.
நிதியமைச்சர் கொடுத்த அல்வா பட்ஜெட் இனிக்கவில்லை எங்களுக்கு.
அய்யா, நீவிர் செய்த கேசரியின் இனிமை இன்னும் நெஞ்சுக்குள் நிறைஞ்சுருக்கு.
உம் நல்ல உள்ளம் ஊரறியும்.
உம் நளபாகம் யாம் அறிவோம்.
அனைத்து பிணிகளுக்கும்
அக்குபிரஷர் புள்ளிகள் உண்டு உம்மிடத்தில்.
ஆசிரியர் அமர ஆசனம் கொடுத்த பின்னே
பேசுவீர் எம்மிடத்தில்.
அம்மா, அம்மா என்ற வார்த்தையை தவிர
வேறு சொல் கேட்டதில்லை நாங்கள்.
அடை காக்கும் தாய்க் கோழியாய்,
எங்களை காப்பீர் நீங்கள்.
அய்யா,
தங்களிடம்
டி. எம். எஸ்.இன் கம்பீரக் குரலும் உண்டு
டி.ராஜேந்தரின் சோகக் குரலும் உண்டு
எஸ். பி. பி.இன் காந்தக் குரலும் உண்டு
எம். எஸ். வி.இன் கீதக் குரலும் உண்டு .
அன்னக்கிளி இளையராஜாவும் தெரியும்.
அனிருத் கானாவும் தெரியும்
சங்கரா பரணமும் இசைப்பீர்.
சங்கர் பட பாடலும் ருசிப்பீர்.
உங்கள் கானம் எமக்கு தேனாய் இனிக்கும்.
அய்யா,
நான் நீட்டும் நோட்டில் எல்லாம்
கண்மூடி கையெழுத்திடுவீர்.
பத்திரம் அய்யா
தங்கள் வீட்டு பத்திரம்.
தாங்கள் ஒரு ராஜ தந்திரி.
சர்க்குலரை நம்பி
சனிக்கிழமைகள் இல்லை.
தங்கள் உள்வாளிகள்
(ஒவ்வொரு மாணவனும் உங்கள் உளவாளியே.)
எங்களுக்கே சேதியும், தேதியும் சொல்வார்.
மனத்தில் பீதியும் கிளப்புவார்.
அய்யா,
தாங்கள் ஒரு சேனாதிபதி.
ஆம்.
பள்ளி வரா மாணவனாகட்டும்,
வந்தும் அடங்கா மாணவனாகட்டும்,
தங்கள் புல்லட் படை
பாயும் அவர் வீடு.
மாணவர் சேவை,
மகேசன் சேவை.
இதுவே உங்கள்
உயிர் மூச்சு.
இம்மட்டும் தானா??
நம் ஆசான் எப்படி?
என் மாணாக்கரிடம் வினவினேன்.
அன்பாய் இருப்பார் என்றான் ஒருவன்..
அழகாய் சிரிப்பார் என்றான் ஒருவன்
திட்டவே மாட்டார், துவளவே மாட்டார்,
தட்டிக் கொடுப்பார், தட்டாமலும் கொடுப்பார்.
பண்பாய் நடப்பார், பதமாய் பேசுவார்,
பாட்டும் பாடுவார்.
குணமாய் கேட்பார், குட்டவே மாட்டார்,
கை தட்டச் சொல்வார், கரகோஷம் செய்வார்,
இதுவும் முடியும், இன்னமும் முடியும் என்பார்.
அப்பப்பா, இத்தனையும் இருக்கும் இவரிடம் உனக்கென்னன்ன பிடிக்கும்?
அதற்குத்தான் ஆயிரம் பதில்கள்.
மீசை பிடிக்கும், அவர் பாசம் பிடிக்கும்.
தவழும் புன்னகை பிடிக்கும்,
தன்னம்பிக்கை தரும் கண்கள் பிடிக்கும்,
பாடும் குரலும் பிடிக்கும், பேச்சும் பிடிக்கும்.
இத்தனையும் எப்படி எழுத?
எண்ணும்போதே ஒருவன் சொன்னான்.
எனக்கு ஒன்று மிகவும் பிடிக்கும் என்று.
என்ன?? என்றேன் நானும்.
தயங்கியபடியே அவனும் சொன்னான்.
“எங்கள் தலைவர் - நாங்கள் தளரும் போது,
தந்தையாய் கட்டி அணைத்து,
தோள் தட்டும் போது,
முட்டும் அந்த தொப்பை மிகவும் பிடிக்கும்” என்றான்.
அய்யா
சொன்னவன் மாணவன் தான், நானல்ல நினைவில் கொள்க.
அதனையும் விடாமல்,
அத்தனையும் எடுத்து,
அரும்பாய் தொடுத்து,
அழகு தமிழில் வடித்தேன் –
- என் ஆதிக் கவிதையை.
அய்யா,
இது கவிதை என்றால்,
நானும் கவி தான் என்றால்,
இச்சொல் மாலை தங்களுக்கே சமர்ப்பணம்.
இத்தருமிக்கு ஆயிரம் பொற்காசுகள் வேண்டாம்.
ஆசான் அருள் ஒன்றே போதும்.
ஆயுசுக்கும்.
வாழ்க தமிழ்!
வளர்க நம் தமிழ் ஆசானின் புகழ்!
நன்றி. வணக்கம்.
(மதுரமங்கலம், அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எங்கள் தலைமை ஆசிரியர் திரு.ஆசான் அருள் தேவதாஸ் அவர்களின் பணி நிறைவு விழா (31.05.2022) அன்று அளித்த வாழ்த்துரை.)
(ரஜிதா த, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை, காஞ்சிபுரம்)