நானிருக்கிறேன் உனக்கு
Oct 14, 2026,11:12 AM IST
-த. ரஜிதா
அன்புத் தோழியே !
கலக்கம் எதற்கு?
கவலைப் படாதே.
நானிருக்கிறேன் உனக்கு.
என்னதான் நடந்தது?
என்னிடம் சொல்.
மலரினும் மெல்லிய உன்னை
மயக்கிய வண்டு எது?
அது நின்னை கடத்தியதா?
அல்லது நின் கரம் கடித்ததா?
அன்பின் அரவணைப்பை தந்து
ஆசை வார்த்தை ஊற்றியதா?
கண்ணில் நீர் எதற்கு?
காரிருள் உடை எதற்கு?
களைந்து விடு,
தூர எறிந்து விடு.
வா, எழுந்து விடு,
என்னோடு நடந்து விடு,
கண் திறந்து காட்டி விடு.
குறைகளை துவைத்து கொட்டி விடு.
கன்னத்தின் துளியை தட்டி விடு.
கயமையைத் தேடி அழித்து விடு.
நானிருக்கிறேன் நாளெல்லாம் உன்னோடு,
விளக்கை போடு, வெளிச்சம் காட்டு.
விண்வெளி ஏறி, வைப்போம் வேட்டு.
அழுகை மாற்றி, அறிவை ஏற்று.
தொழுகை ஒன்றே தீர்க்க ஊற்று.
மின்னல் கீற்றை இழுத்து
கூடை பின்னலாம் வா.
நிலவு பந்தின் மேலேறி
நீர் இறைக்கலாம் வா.
வானவில் உடைத்து
வானம் வரையலாம் வா.
வண்ணப் பூக்களை நுகர்ந்து
வாசம் வீசலாம் வா.
அச்சம் தவிர்த்து
அக்கறை ஏற்று.
அகத்தில் ஒளியேற்றி
அறியாமை அகற்று.
கைகள் கூடி கரையை நோக்கி,
கவிதை பாடி கவலை போக்கி,
எழு, பீனிக்ஸ் பறவையாய் எழு.
நானிருக்கிறேன் உனக்கு .
(ரஜிதா த, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, படப்பை, காஞ்சிபுரம்)