குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

Meenakshi
Jul 09, 2025,02:35 PM IST

ஆனந்த்: குஜராத்தில் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில்  இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது திடீர் என கம்பீரா பாலத்தின் நடு பகுதி மட்டும்  இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. பாலம் இடிந்த நேரத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன் மற்றும் ஒரு ஆட்டோ ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. அந்த வாகனங்களில் இருந்தவர்களை ஆற்று நீர் ஆடித்துச் சென்றது. மேலும், பாலத்தில் ஒரு டேங்கர் லாரி கீழே விழும் வகையில் தொங்கிக் கொண்டு இருந்தது.




இந்த சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், போலீசார், பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 43 ஆண்டுகள் ஆகின்றன.கடந்த ஆண்டு தான் மேம்பாலம் பழுது பார்க்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து குஜராத் சுகாதார துறை அமைச்சர் ரிதிகேஷ் படேல் பேசுகையில், மஹி ஆற்றில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் வரை வீழ்ந்துள்ளன. மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் ஒரு ஸ்லாப் விழுந்ததால் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.