கண்ணும் கண்ணும் நோக்கினால்!

Su.tha Arivalagan
May 02, 2026,05:02 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


கைகளும் 

மெய்களும்  

உரசாமலும் 

புதுமலர்ப்

பூக்கும்


உணவு  

உண்ணாமலும் 

தண்ணீர்  

அருந்தாமலும்

தாக்கும்


பெயர்

அறியாமலும்  

ஊர்

தெரியாமலும்

தவிக்கும்




உடல் தனித்தும்

உயிர் ஒன்றியும் 

கிடக்கும்


நடக்கும் 

வழிதனில்

அழகனை

அகம் 

வடிக்கும்


கேட்கும் 

குரலின் 

ஓசையில் 

அவனைப்

பதிக்கும்


தன்னை 

மறந்து

உள்ளமோ

கலந்தவனை

நினைக்கும்


கண்ட 

பொழுதில்

மனத்திலோ

சிறகுகள்

முளைக்கும்


சொல்லவே 

துடிக்கும் 

ஆனால்

சொல்லாமலும்

நடிக்கும்..


ஒற்றைப்

பார்வையில் 

இலட்சம் கவிதைகள்

பிறக்கும்


கற்றையாய்க் 

காந்த அலைகளைத்

தடையின்றி 

நுழைக்கும்


உலகமே  

எதிர்த்தாலும் 

உள்ளம்

உருகித்

தொலைக்கும்!


(ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்தும் காதலர் நாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).