தீபாவளி அலப்பறைகள்.. 2கே கிட்ஸ் உங்களுக்கெல்லாம் இது கனவுதாம்லே!
சென்னை: தீபாவளி அலப்பறைகள் எல்லாம் ஒரு காலத்தில் அமர்க்களமாக இருக்கும். இப்பெல்லாம் அப்படியாப்பட்ட கொண்டாட்டங்களை இந்தத் தலைமுறையினர் கண்டிப்பாக மிஸ் செய்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகளின் வெடிச்சத்தமும், புத்தாடை மணமும் மட்டுமா? அதையும் தாண்டி, தமிழ் கலாச்சாரத்தில் தீபாவளி என்றாலே அதிரடி என்டர்டெயின்மென்ட் தரும் சில அசத்தல் 'அலப்பறைகள்' தான் ஹைலைட்!
பட்டாசு வெடிப்பது முதல் பலகாரங்கள் சுடுவது வரை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் கலகலப்பான தீபாவளி அலப்பறைகள் இல்லாமல் தீபாவளி வராது, போகாது.
இப்போது மாதிரியெல்லாம் அப்போது பட்டாசுகளை வாங்கிக் குவிக்க முடியாது. காரணம், அப்போதைய பொருளாதாரம் அப்படி இருந்தது. சிறுக சிறுக காசு சேர்த்து பட்டாசு வாங்கும் குடும்பங்கள்தான் அப்போது அதிகம். அதிலும் சிறார்கள் தனியாக வீட்டில் கல்லா கட்டுவார்கள் பாருங்க அது தனிக் கதை. அப்பத்தாக்களின் சுருக்குப் பைகள், அப்பாக்களிடமிருந்து பொய் சொல்லி 5 காசு, 10 காசு என தேத்துவது.. என திரில்லிங் கலாட்டாக்கள் நடக்கும்.
தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமாக பொட்டு கேப் வாங்கி டெய்லி யாருக்கும் தெரியாமல், துப்பாக்கி சகிதம் நண்பர்களோடு சுட்டு விளையாடுவதும், சின்னச் சின்ன வெடிகளை வெடிப்பதும், குட்டி குட்டியாய் அனுபவிப்பதுமாக தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கும்.
தீபாவளி நெருங்கும் சமயத்தில், கடைக்காரரிடம் போய், "அண்ணே, நல்லா சத்தமா வெடிக்கணும், சவுண்டு சும்மா அதிரணும், அப்படி வெடி கொடுங்க... கம்பி மத்தாப்புலாம் கலர் கலரா எரியணும்" என்று ஆரம்பிக்கும் அவுட்லைன்.
சத்தமாக வெடிக்கும் வெடியை வெடித்த பிறகு அந்த புதுச்சட்டையின் மஞ்சள் தேய்த்த காலரைத் தூக்கி விட்டு ஒரு கெத்து காட்டுவோம் பாருங்க.. அது வேற லெவல் ஹேப்பிங்க. இதுல வெங்காய வெடியெல்லாம் அப்போது இருந்தது. சுவரில் எரிந்து அது வெடித்துச் சிதறும்போது வரும் சத்தம் சுவர்களுக்குள் அந்தப் பக்கம் இருக்கும் குடும்பத்தினரை அதிர வைக்கும்.. அவர்கள் வெளியில் வந்து கத்துவதற்குள் வேறு சுவரைத் தேடி ஓடுவது தனி கலாட்டா.
ஒருவேளை மழை வந்துவிட்டால், பட்டாசைக் காய வைக்க ரொம்பக் கஷ்டப்படுவோம். இப்போல்லாம் ஹேர் டிரையரை வைத்து காய வைக்கும் தலைமுறை வந்து விட்டது.
அணுகுண்டுக்கே பயப்படாத பசங்க ஒரு பக்கம் வெளுத்துக் கட்டிட்டு இருப்பாங்க.. மறுபக்கம் லெட்சுமி வெடியை பற்ற வைத்துவிட்டு, காதில் கை வைத்துக் கொண்டு தெருக்கோடி வரை ஓடும் 'துணிச்சலான' தம்பிகளும் இருப்பாங்க.
இதுல இன்னொரு போட்டியும் பசங்களுக்குள் நடக்கும். அதாவது யார் வீட்டு வாசல்ல நிறைய பட்டாசுக் குப்பை இருக்கோ அவங்கதான் ஜெயிப்பாங்க.. தோத்த பசங்க சேர்ந்து ஜெயிச்ச பசங்களுக்கு கடலை மிட்டாய், தேன் மிட்டாய் என வாங்கித் தரணும்.. ரொம்ப காஸ்ட்லி போட்டியாக பெட்டாக இருந்தால், 2 மணி நேரம் வாடகை சைக்கிள் எடுக்க, வாடகைக் காசைத் தரணும்.. 80ஸ், கிட்ஸெல்லாம் ரொம்ப சிம்பிளான பசங்கப்பா!
இந்த எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வைபவம் இன்னொரு பக்கம். அதிகாலையிலேயே அலாரம் வச்சு எழுப்பி விட்டுருவாங்க வீட்டுல. "டேய்! இன்னும் எந்திரிச்சு குளிக்கலையா? மணி நாலு ஆச்சு பாரு!" என்று வீட்டுப் பெரியவர்கள் சவுண்டு விடும்போது அல்லையில் பிடிச்சுக்கும்., நாலு தானப்பா ஆகுது என்று ரூல்ஸெல்லாம் பேச முடியாது.. காரணம் முதலில் குரல் வரும், அடுத்து அடி வருமே!
சுடச்சுட நல்லெண்ணெயைக் காய்ச்சி அப்பத்தா வீட்டுக்கு நடுவில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடும். ஆண்கள் எல்லாம் கோவணாண்டிகளாக மாறி எடுத்துத் தேய்த்துக் கொண்டு போய் குளிக்க வேண்டும். அப்போது வீட்டுக்கு ஒரே ஒரு பாத்ரூம்தான்.. பாத்ரூமில் பெரியவர்கள் போய் குளிப்பார்கள். நம்மை மாதிரி சுள்ளான்கள் எல்லாம் கிணத்தடியில் போய் சுதந்திரக் குளியல் குளிக்க வேண்டியதுதான்.
எல்லாம் முடிந்து, சாமியெல்லாம் கும்பிட்ட பின்னர் மஞ்சள் வைத்த புது டிரஸ்ஸை அப்பா எடுத்துத் தருவார். அதை பயபக்தியுடன் திவய்மாக வாங்கி கொண்டு போய் (நமக்குப் பிடிச்ச மாதிரி எடுத்த டிரஸ்ஸாக இருந்தால் சந்தோஷ முகத்துடன்.. இல்லாட்டி சுணங்கிய முகத்துடன்) தனியாக பிரித்துப் பார்க்கும்போது ஒரு ஃபீல் வரும் பாருங்க.. அடடா.. சுகானுபவம்!
தீபாவளிப் புத்தாடை என்பது வெறும் துணி மட்டுமல்ல, அது ஒரு வருடாந்திர ஃபேஷன் ஷோ!
இப்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் டிரஸ் வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் முன்பு அப்படி இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே எடுத்து டெய்லரிடம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தீபாவளிக்கு முன்பு டிரஸ் கிடைக்கும். குடும்பத்தோடு ஜவுளிக் கடைக்குச் செல்வதே ஒரு தனி கொண்டாட்டம்தான். "இந்தக் கலர் நல்லா இல்ல, வேற காட்டுங்க" என்று கடைக்காரரை டென்ஷன் ஆக்கி ஒரு வழியாக டிரஸ் எடுத்து முடித்த பிறகு வெளியில் வந்ததும் எல்லோரும் அப்பாவைப் பார்ப்பார்கள்.. அடுத்து ஹோட்டலுக்குத்தானே என்ற எதிர்பார்ப்புடன்.
அவரும் ஏமாற்ற மாட்டார். நல்ல ஹோட்டலாகப் போய் பாசந்தி, பூரி செட், தோசை என்று சாப்பிட்ட பிறகுதான், தீபாவளி பர்ச்சேஸ் நிறைவு பெறும்.
இப்படிப் பார்த்துப் பார்த்து எடுத்துத் தைத்த உடையை அணிந்து கொண்டு அப்பத்தா செய்து கொடுத்த இனிப்புகளைச் சாப்பிடும்போது டிரஸ்ஸில் அது விடாமல் ஜாக்கிரதையாக சாப்பிடுவது இன்னொரு அனுபவம்.
தீபாவளி பலகாரங்கள் செய்வது கூட்டு முயற்சி. ஆனால் அதில் நடக்கும் சுவாரஸ்யமான பஞ்சாயத்துகள் பெரிய லிஸ்ட்டே போடலாம். எங்க வீட்டுல எப்புமே யூனிபார்மாக இருக்கக் கூடிய தீபாவளி பலகாரம் என்றால் கார முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம், சீயம், வடை ஆகியவைதான். இதைத் தாண்டி சம் டைம்ஸ் குளோப் ஜாமூன் வந்து சேர்ந்து கொள்ளும்.
செய்த பலகாரங்களை டப்பாவில் அடைத்து வைப்பதற்குள், நைஸாக எடுத்து டேஸ்ட் பார்த்துப் பார்த்தே ஒரு செட் ஸ்வீட்ஸை காலி செய்வதும் உண்டு.
தீபாவளி நாளன்று, விடியற்காலைக் குளியல், வாங்கிய பட்டாசுகளை வெடித்துத் தீர்ப்பது, சொந்தக்காரர்களின் விசிட், உறவினர்களுக்கு ஸ்வீட்ஸ் பார்சல் கொடுப்பது என்று ஒட்டுமொத்த குடும்பமும் பிசியாகி, மாலையில் டயர்டாகிப் போய் ஓய்ந்து போய் அமரும். சில சமயம் புதுப் படத்துக்குப் போவதுண்டு. பல நேரங்களில் டிவியில் மூழ்கி அந்த நாளை முடிப்பதுண்டு.
என்னதான் அலப்பறைகள், பகட்டு, சத்தங்கள் இருந்தாலும், இந்தச் சின்னச் சின்னக் கொண்டாட்டங்களும் கூத்துகளும்தான் நம் உறவுகளை மேலும் நெருக்கமாக்குகின்றன இல்லையா.. இப்போதெல்லாம் தனித் தனித் தீவுகளாக குடும்பங்கள் மாறி விட்டன. தனித் தனியாக கொண்டாடுகிறார்கள். பலர் கொண்டாடுவதையே விட்டு விட்டனர்.
இந்தத் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி விட்டோம்.. அடுத்த வருடம் வரை இனி காத்திருக்கணுமே என்ற ஏக்கத்துடன் நாம் கொண்டாடிய தீபாவளிகள் மனசுக்குள் நிழலாடும்போது ஏக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
ஒவ்வொரு வாய்ப்பையும் கொண்டாடுவோம்.. கொண்டாட்டம்தானே நமது வாழ்க்கை.. உங்களோட தீபாவளி அனுபவங்களையும் எங்களுடன் ஷேர் பண்ணிக்கங்க!