Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
சென்னை : தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவராத்திரி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரிசை கட்டி வர காத்திருக்கின்றன. இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி நிறைவடைகிறது. அக்டோபர் 01ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 02ம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசதி ஆகியன கொண்டாடப்பட உள்ளது.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது தசரா பண்டிகையாகவும், வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதற்கு முன்பு சரஸ்வதி பூஜை புதன்கிழமை வருவதால், புதன் மற்றும் வியாழன் என இரண்டு நாட்கள் விடுமுறை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு அக்டோபர் 22ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குவதால், விரதம் இருக்கும் பக்தர்கள் அறுபடை வீடு முருகன் கோவில்களுக்கும் செல்வார்கள். குறிப்பாக திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.
இப்படி தொடர்ந்து பண்டிகைகள், விடுமுறைகள் வருவதால் பயணிகள் தங்களின் சொந்த ஊர்களுக்கும், ஆன்மிக தலங்களுக்கும் பயணம் செய்வார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக பல சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 17ம் தேதியான நாளை காலை 8 மணிக்கு துவங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது பயணம் செய்வதற்கு 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே ரயில் டிக்கெட்களை புக் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் அக்டோடர் மாதம் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை துவங்க உள்ளது.
- செப். 28 முதல் அக். 26 வரை அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாகர்கோயில்- தாம்பரம் சிறப்பு ரயில்
- செப்.29- அக். 27 வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில் இயக்கம்
- செப். 25 முதல் அக். 23 வரை வியாழக்கிழமைகளில் சென்னை - கோவை போத்தனூருக்கு சிறப்பு ரயில்
- மறுமார்க்கத்தில் செப்.26, முதல் அக். 24 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னைக்கு சிறப்பு ரயில்
- செப். 23 முதல் அக். 23 வரை தூத்துக்குடி- எழும்பூர் வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் சிறப்பு ரயில்
- செப்.30 முதல் அக்.28 வரை செவ்வாய்க்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்