டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

Su.tha Arivalagan
Jul 15, 2025,10:58 AM IST

டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்திற்குட்பட்ட செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும், துவாரகா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கும் திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். 


தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர்.  இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் இல்லை.




இதேபோல மும்பை பங்குச் சந்தைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. "Comrade Pinarayi Vijayan" என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து மிரட்டல் வந்துள்ளது. பங்குச் சந்தை கட்டிடத்தில் 4 RDX IED வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 3 மணிக்கு வெடிக்கும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மும்பை போலீஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தது. ஆனால், அங்கு எதுவும் சந்தேகப்படும்படியாகக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக மாதா ரமாபாய் அம்பேத்கர் மார்க் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 351(1)(b), 353(2), 351(3), 351(4) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் BNS சட்டத்தின் கீழ் வருகின்றன. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டுபிடிக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.