டெல்லியில் நிலநடுக்கம்.. ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிர்வுகள் எதிரொலித்தன!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் அதிர்வுகள் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தன.
ஹரியானாவின் ஜஜ்ஜர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் சுமார் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
காலை 9:04 மணியளவில் நிலநடுக்கம் தாக்கியபோது, டெல்லியின் பல பகுதிகளில் மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்கள் ஆடியதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நொய்டா மற்றும் குருகிராமில் உள்ள அலுவலகப் பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன; கம்ப்யூட்டர்கள் தடதடவென ஆடியதாலும், மின்விசிறி, டேபிள் உள்ளிட்டவை ஆட்டம் கண்டதாலும் ஊழியர்கள் பீதியடைந்து வெளியேறினர்.
ஜஜ்ஜரில் உள்ள நிலநடுக்க மையத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் ஷாம்லி வரையிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. சில விநாடிகள் வரை இந்த நிலநடுக்கமானது நீடித்ததாக தெரியவந்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டது. மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், வெளியே ஓட படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. நிலநடுக்கத்தின்போது வாகனம் ஓட்டுபவர்கள் திறந்த வெளியில் வாகனத்தை நிறுத்துமாறும் தேசிய பேரிடர் மீட்புப் படை அறிவுறுத்தியது.
இந்த நிலநடுக்கம் லேசானதாக இருந்ததால் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.