டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மனதை உலுக்கியது.. ராகுல் காந்தி, பிரியங்கா வேதனை

Su.tha Arivalagan
Nov 10, 2025,10:27 PM IST

டெல்லி: டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்குவதாக உள்ளது என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே இன்று மாலை நடந்த கார் வெடிப்புச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டு வெடித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது. இந்த துயர சம்பவத்தில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்ததாக வரும் தகவல் மிகுந்த வேதனை அளிக்கிறது.




இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயரமடைந்த குடும்பங்களுடன் நான் துணை நிற்கிறேன், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்த செய்தி மிகவும் மனதை உலுக்குவதாக உள்ளது.


இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்..