புதுப் பொலிவு பெறும்.. டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் இல்லம்.. ரூ. 60 லட்சம் செலவில்!
டெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ இல்லமான, ராஜ் நிவாஸ் மார்க்கில் உள்ள பங்களா எண் 1, ரூ. 60 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது.
டெல்லி பொதுப்பணித் துறை இதுதொடர்பாக டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் ஏலங்கள் ஜூலை 4 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வர் ரேகா குப்தாவிற்கு பங்களா எண் 1 மற்றும் 2 என இரண்டு இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பங்களா எண் 1 அவரது வசிப்பிடமாகவும், பங்களா எண் 2 முகாம் அலுவலகமாகவும் பயன்படுத்தப்படும்.
ஜூன் 28 அன்று வெளியிடப்பட்ட டெண்டரின்படி, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 9.3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து தொலைக்காட்சிகள், 7.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 ஏர் கண்டிஷனர்கள், மற்றும் 5.74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 14 சிசிடிவி கேமராக்கள் முதலமைச்சரின் இல்லத்தில் பொருத்தப்படும். மேலும், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான யுபிஎஸ் வசதியும் நிறுவப்படும்.
இதுமட்டுமல்லாமல், 1.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 23 ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள், 85,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு OTG (ஓவன் டோஸ்ட் கிரில்), 77,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு தானியங்கி சலவை இயந்திரம், 60,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பாத்திரம் கழுவும் இயந்திரம், 63,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு கேஸ் அடுப்பு, 32,000 ரூபாய் மதிப்புள்ள மைக்ரோவேவ்கள், மற்றும் 91,000 ரூபாய் மதிப்புள்ள ஆறு கீசர்கள் ஆகியவையும் பொருத்தப்படவுள்ளன.
வீட்டிற்குள் 6,03,939 ரூபாய் செலவில் மொத்தம் 115 விளக்குகள், சுவர் விளக்குகள், சான்ட்லியர் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய சரவிளக்குகள் பொருத்தப்படும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேகா குப்தா தற்போது ஷாலிமார்பாக் இல்லத்தில் வசித்து வருகிறார். பிப்ரவரி மாதம் டெல்லி முதலமைச்சராகப் பதவியேற்ற ரேகா குப்தா, முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்ச்சைக்குரிய அதிகாரப்பூர்வ இல்லமான 6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை பங்களாவில் குடியேற மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலாக, அந்த இல்லத்தை அருங்காட்சியகமாக மாற்றுவதாக அவர் உறுதியளித்தார்.
நாங்கள் ஷீஷ்மஹாலை (கெஜ்ரிவால் வசித்த வீட்டுக்கு பாஜக வைத்த பெயர்) ஒரு அருங்காட்சியகமாக மாற்றுவோம்... பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். இந்த பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு நன்றி என்று அவர் தெரிவித்திருந்தார்.
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அவர் வசித்து வந்த பங்களாவை பெரும் பொருட் செலவில் புதுப்பித்தது தொடர்பாக பாஜக கடுமையாக விமர்சித்திருந்தது. 40,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருந்த அந்த ஆடம்பரமான இல்லம், 2015 முதல் அக்டோபர் 2024 வரை கெஜ்ரிவாலின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்டது என்பது நினைவிருக்கலாம்.