டெல்லி ஜந்தர் மந்தரில் போராடத் தடை: போராட்டங்கள் நடத்த 3 புதிய இடங்களை அறிவித்தது காவல்துறை!
டெல்லி: நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக விளங்கிய ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தரை டெல்லி காவல்துறை நீக்கியுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் குழு பரிந்துரை :
பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், நகரின் போக்குவரத்தையும் அமைதியையும் சீர்குலைக்காமல் போராட்டங்களை நடத்துவதற்காக மாற்று இடங்களைக் கண்டறிய மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்தக் குழுவின் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு, ஜந்தர் மந்தர் பகுதி போராட்ட இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக (De-notified) அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த 3 புதிய இடங்கள் டெல்லி காவல் ஆணையர் அனுராக் குமார் வெளியிட்டுள்ளார்.
புதிய அரசாணையின்படி (Standing Order No. L&O/48/2026), இனி பொதுமக்களும் அமைப்புகளும் போராட்டம் நடத்தப் பின்வரும் 3 மைதானங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. ராம்லீலா மைதானம் (Ramlila Ground)
2. புராரி மைதானம் (Burari Ground)
3. கிழக்கு டெல்லி சிபிடி மைதானம் (East Delhi CBD Ground)
இந்த புதிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முறைப்படுத்துவதற்காக விரிவான மற்றும் திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (SOP) தனியாக வெளியிடப்படும் என்றும் டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் :
நாடாளுமன்றத்திற்கு மிக அருகில் உள்ள ஜந்தர் மந்தர், பல தசாப்தங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் கோரிக்கைகளை அரசுக்கு உணர்த்தும் பிரதான மையமாகத் திகழ்ந்து வந்தது. எனினும், டெல்லியின் வணிக மையப் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு அச்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.டெல்லி காவல் துறையின் இந்த அறிவிப்பு, தலைநகரில் இனி நடைபெறும் போராட்டங்களின் தன்மையிலும் வடிவத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.