டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு...பகீர் கிளப்பும் தகவல்
டெல்லி : டெல்லியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கடுமையான சுவாச நோய்கள் (ARI) ஏற்பட்டுள்ளன. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பதே இதற்குக் காரணம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் சுவாசிக்கும் காற்று, கடுமையான சுவாச நோய்கள் அதிகரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ்யசபாவில் டாக்டர் விக்ரம்ஜித் சிங் சஹ்னியின் கேள்விக்கு பதிலளித்த சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ், "மாசுபட்ட காற்று சுவாச நோய்களுக்கு ஒரு தூண்டுதல் காரணியாக செயல்படுகிறது" என்று கூறினார். நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் மாசுபாடு அளவை அரசாங்கம் ஒரு தேசிய கண்காணிப்பு அமைப்பு மூலம் உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு தரவுகளின்படி, டெல்லியில் உள்ள ஆறு மத்திய மருத்துவமனைகளில் 2022 இல் 67,054 பேரும், 2023 இல் 69,293 பேரும், மற்றும் 2024 இல் 68,411 பேரும் கடுமையான சுவாச நோய்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றதாக சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2022 இல் 9,878 இலிருந்து 2024 இல் 10,819 ஆக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை காலை டெல்லியில் ஒட்டுமொத்த AQI 377 ஆக பதிவானது. இந்த நேரத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தாலும், பல பகுதிகளில் மாசுபாடு அளவு 400க்கு மேல் இருந்தது. மும்பை, சென்னை போன்ற பிற பெருநகரங்களும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கின்றன. கடுமையான மாசுபாடு காலங்களில் இந்த நகரங்களிலும் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அமைச்சகம் தனது அறிக்கையில், "மாசுபட்ட காற்றின் தாக்கம் உணவுமுறை, தொழில், சமூக-பொருளாதார நிலைமைகள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல காரணிகளைப் பொறுத்தது. இதனால் சிலர் மற்றவர்களை விட மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாறலாம்" என்று கூறியுள்ளது.