தமிழகத்தின் புதிய டிஜிபி யார்.. டெல்லி யுபிஎஸ்சி இன்று ஆலேசானை!
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜூவாலின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய டிஜிபியைத் தேர்வு செய்து மூன்று மாதங்களுக்கு முன்பாக மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பியிருக்க வேண்டும்.
ஆனால், முறைப்படி அதனைக் கடைப்பிடிக்காமல், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் தான் அதற்கான பட்டியல் அனுப்பப்பட்டது. அதே சமயம், சங்கர் ஜூவால் ஓய்வு பெற்றதால், பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரியான வெங்கட்ராமனை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார். இந்த நியமனம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பின.
இந்தநிலையில், தமிழ்நாடு டிஜிபி நியமனம் குறித்து டெல்லியில் யுபிஎஸ்சி இன்று ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையின் போது தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் என்.முருகானந்தன், உள்துறைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று இருப்பதாகவும் தெரிகிறது.
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி பதவிக்கு தகுதியான 3 பேரை யுபிஎஸ்சி இன்று இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இறுதி செய்யப்படும் 3 பேரில் ஒருவரை தமிழ்நாடு டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.