முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது
சென்னை: தொகுதி மறுவரயறை சட்ட மசோதா குறித்து விவாதிக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன.
அதேபோல ஒரே ஒரு உறுப்பினரை வைத்துள்ள தேமுதிகவும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் திடீரென அழைப்பு விடுத்தார்.
இன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெகவுக்கு ஒரு எம்.பி கூட தமிழ்நாட்டில் இல்லை. இந்த நிலையில் தவெக அரசு கூட்டிய இந்தக் கூட்டத்திற்கு திமுக, அதிமுக கட்சிகள் வருமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இரு கட்சிகளும் இக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளன.
தேமுதிகவும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாது. ஆனால் அதை புறக்கணிப்பு என்று சொல்லாமல் லாவகமான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளது அக்கட்சி. தான் டெல்லியில் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதாக தேமுதிக ராஜ்யசபா உறுப்பினர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டுக்கு மொத்தம் எண்ணிக்கை 57 எம்.பிக்கள் உள்ளனர். இதில் 39 பேர் லோக்சபா எம்.பிக்கள், 18 பேர் ராஜ்யசபா எம்.பிக்கள்.
57 எம்.பிக்களில் திமுகவுக்குத்தான் அதிகம் உள்ளனர். அதாவது 30 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிகவுக்கு தலா ஒரு எம்பிக்கள் உள்ளனர். மீதமுள்ள 20 பேர் தவெகவுக்கு ஆதரவாக உள்ளவர்கள் ஆவர்.
கட்சி வாரியாக லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை
திமுக - 22
காங்கிரஸ் - 9
விடுதலைச் சிறுத்தைகள் - 2
இந்திய கம்யூனிஸ்ட் - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
மதிமுக - 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
இதில் திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே தற்போது தவெகவுடன் நட்போடு உள்ளனர். லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது.
கட்சி வாரியாக ராஜ்யசபா எம்.பிக்கள் எண்ணிக்கை
திமுக - 8
அதிமுக - 4
காங்கிரஸ் - 3
பாமக - 1
மக்கள் நீதி மய்யம் - 1
தேமுதிக - 1
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியும் புறக்கணிக்குமா என்று தெரியவில்லை. இந்தக் கூட்டத்தை பாமகவும் விமர்சித்துள்ளது. எனவே அந்தக் கட்சியின் நிலைப்பாடும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.