மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா 2026: ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவிப்பு!
சென்னை : நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள 'தொகுதி மறுவரையறை மசோதா, 2026' (Delimitation Bill, 2026) வை ஆதரிப்பதாக திமுக அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத தொகுதிகளை உயர்த்தும் வகையில் இந்த மசோதா அமைவதாலும், இதனால் தமிழ்நாட்டின் தொகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதாலும் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்திருப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா ஆகியவற்றை நிறைவேற்றும் நோக்கத்துடன் நவம்பர் 30ம் தேதியன்று நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட உள்ளது. இதனை முன்னிட்டு நவம்பர் 28 தேதியான இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன், தொகுதி மறுவறை மசோதா மீதான தங்களின் நிலைப்பாட்டை திமுக அறிவிக்கும் என கூறப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, மசோதாவின் முக்கிய அம்சங்கள் மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்:
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதத் தொகுதிகள் வழங்கப்படுவதாக இருந்தால் மட்டுமே மசோதாவிற்கு திமுக ஆதரவளிக்கும் என நாங்கள் கூறியிருந்தோம். அதேபோல தற்போது 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மசோதாவின்படி மக்களவையின் அதிகபட்ச பலம் 850 (மாநிலங்கள்: 815, யூனியன் பிரதேசங்கள்: 35 என்ற அடிப்படையில்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் தொகுதிகள் 59 ஆக இருக்கும். இது எங்களுக்கு ஏற்புடையதே.
தமிழகத்தின் பிரதிநிதித்துவம்:
தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் குறையக்கூடாது என்பதே திமுகவின் அடிப்படை நிலைப்பாடு. தற்போது கொண்டு வரப்படும் மசோதாவின்படி தமிழகத்திற்கு 7.21 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்பதால் இதில் நமக்கு நட்டம் ஏதுமில்லை என ஆ.ராசா விளக்கினார்.
கடந்த 1971-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையின் போது தமிழகத்திற்கு இரு தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த 25 ஆண்டுகள் மற்றும் உரிமை:
அடுத்த 25 ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்றும், தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்து உரிமையை நிலைநாட்டுவோம் என்றும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறைக்கு தமிழ்நாடு எப்போதும் எதிரானதல்ல எனக் குறிப்பிட்ட ஆ.ராசா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பாதிக்கும் வகையிலான மறுவரையறைக்கு மட்டுமே உடனடியாக எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார்.
நியாயமான தொகுதி மறுவரையறையைத் தவிர வேறு எதையும் திமுக கூறவில்லை என்றும், காங்கிரஸுடன் கூட்டணியில் இல்லை என்பதற்காக திமுக புதிய முடிவு எடுத்ததாகச் சித்தரிப்பது கேவலமான செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தொடர்பான இந்த விவாதம், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் போது தேசிய அளவிலும் மாநில அளவிலும் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.