தொகுதி மறுவரையறை: சட்டசபையில் தமிழக அரசு தனித் தீர்மானம்

Su.tha Arivalagan
Aug 12, 2026,11:44 AM IST

சென்னை:தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில், இந்திய மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில், தவெக அரசு சார்பில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சித் தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல்: 


தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் முன்மொழிந்த அரசுத் தீர்மானத்தின் மீது பேசிய சிபிஐஎம் (CPM) சட்டமன்ற உறுப்பினர் செல்ல சுவாமி, மத்திய அரசின் இந்த முயற்சி நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைக்கும் செயல் என்று கடுமையாகச் சாடினார்."மக்கள் தொகை கட்டுப்பாட்டைக் சிறப்பாகப் பின்பற்றி வெற்றி கண்ட மாநிலங்களுக்குத் தண்டனை அளிப்பது போல் இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கை அமைந்துள்ளது. மாநிலங்களின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கே போதுமான நேரம் இல்லாத சூழலில், மாநிலங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தி இத்தீர்மானத்திற்குத் தனது ஆதரவை வழங்கினார்.


முதல்வர் விஜய் முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள் :




சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் விஜய், முக்கியமான மூன்று கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டினார்.


1. உறுப்பினர்கள் எண்ணிக்கை நிரந்தரம்: நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போதிருப்பது போல 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக நீடிக்கப்பட வேண்டும்.

2. விகிதாச்சார பிரதிநிதித்துவம்: மக்களவை உறுப்பினர்களின் இடங்களின் எண்ணிக்கையை மாநிலங்களுக் கிடையே பகிர்வதில், தற்போதிருக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் மாறாமல் அப்படியே நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

3. பெண்களுக்கான 1/3 பங்கு ஒதுக்கீடு: வரவிருக்கும் மக்களவைப் பொதுத்தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளையும் மாநிலங்களையும் கலந்து ஆலோசித்த பின்னரே தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் எனத் தமிழக சட்டமன்றம் ஒருமித்த குரலில் வலியுறுத்தியுள்ளது.