100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

Meenakshi
Apr 22, 2025,06:41 PM IST

சென்னை: நடப்பாண்டில் 100 விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  3% இட ஒதுக்கீட்டின் கீழ் கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 104 பேருக்கு கடந்த ஆண்டு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மேலும் 100 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்.




11 விளையாட்டு வீரர்களுக்கு கடந்த ஆண்டு காவல்துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 32 உதவி ஆய்வாளர்கள் பணிக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு காவல்துறையில் பணி கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.


மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து திட்டங்களை தீட்டப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்காக சட்ட முன் வடிவை இந்த சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.



இதன்மூலம், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 13 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சிப் பொறுப்புகளில் அமர இருக்கிறார்கள். அதேபோல் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிக்க இந்த அரசு தொடர்ந்து துணை நிற்கும்.


198 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ.4 கோடி 55 லட்சம் சாம்பியன் ஃபவுண்டேஷன் மூலம் பயணச் செலவு மற்றும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 196 பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு ரூ. 27 கோடி ஊக்கத்தொகை நிதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.