முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

Meenakshi
Sep 10, 2025,03:12 PM IST

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இன்றைக்கு 2வது ரவுண்டு போயிருக்கிறார். திரும்பி வரும்போது அவர் மட்டும் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு, டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தத்தமது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாமக தலைவர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய் என பல்வேறு கட்சி தலைவர்களும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.




அதன்பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அதிமுகவினர் இதை ஒப்புக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இன்றைக்கு 2வது ரவுண்டு போயிருக்கிறார். திரும்பி வரும்போது அவர் மட்டும் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு, டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை. 


எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்சில் செல்வார் என நான் பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதன் அப்படி பேசமாட்டான். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 100  ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடன் மன நலத்துடன் வாழ வேண்டும். பாஜகவின் அறுவை சிகிச்சையால், அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன். அதிமுக கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன். 


எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும். மிகவும் வன்மத்தோடு பேசி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுபவர் தான் உண்மையான தலைவர். எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடமிருந்து அ.தி.மு.கவை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.