மரங்களை வளர்க்கும் மாணவர்கள்… பசுமையை விதைக்கும் பள்ளி!

Su.tha Arivalagan
May 27, 2026,04:57 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியின் ஊக்குவிப்பால், மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவது பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.


சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ப்பை மாணவர்களிடம் சிறுவயதிலிருந்தே உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அவற்றை வீடுகளில் நட்டு வளர்க்க ஊக்குவித்துள்ளது.




மாணவர்கள் தாங்களே மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தினமும் பராமரித்து வருகின்றனர். மேலும், வளர்க்கப்படும் மரங்களின் புகைப்படங்களை பள்ளிக்கு அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் கூறியதாவது:


“மரம் வளர்ப்பதன் அவசியத்தை மாணவர்களுக்கு இளமையிலேயே கற்றுக் கொடுத்தால், அது அவர்களின் வாழ்நாள் முழுவதும் நல்ல பழக்கமாக இருக்கும். மாணவர்களே மரங்களை பராமரிப்பதன் மூலம், வீடுகளின் அருகில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. தாங்கள் நட்ட மரம் என்பதால், மாணவர்கள் அதனை அதிக அக்கறையுடன் பாதுகாத்து வருகின்றனர்.




கொரோனா காலத்தில் ஆக்சிஜனின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்தோம். இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும். மாணவர்கள்தான் நாட்டின் எதிர்கால செல்வங்கள்; பசுமையை மீட்டெடுக்கும் பணியை அவர்களிடமிருந்து தொடங்குவது சிறந்த முயற்சியாகும்.


எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மரங்களை வளர்த்து வருகின்றனர். ஆசிரியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களை உற்சாகப்படுத்துவதுடன், பள்ளி சார்பிலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன,” என்றார்.




பள்ளியின் இந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முயற்சி, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மாணவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளோம். கடுமையாக வெயில் கொளுத்துதே என்று வருந்தும் ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்றை நடுவோம் என்று உறுதி எடுத்தாலே போதும்.. வெயிலின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.. செய்வோமா!