‘ஓம்’ படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி: முதலமைச்சர் விஜய்க்கு தனுஷ் நன்றி

Su.tha Arivalagan
Nov 19, 2026,11:14 AM IST

‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘ஓம்’ (O.M: Operation Mole). வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசிருதீன் ஷா உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், பல தடைகளைத் தாண்டி வரும் நவம்பர் 20-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


முதலமைச்சர் விஜய்க்கு தனுஷ் நன்றி:




புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளைத் திரையிடத் தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி, ‘ஓம்’ திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பலரின் கூட்டு உழைப்பால் உருவாவது. வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், காலை 6 மணி காட்சிக்கு வரும் ரசிகர்கள் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம் என்றும் அவர் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.


ரிலீஸ் தள்ளிவைப்பும், தணிக்கைச் சிக்கல்களும்:


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம்’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு மரியாதை அளிக்கும் விதமாகத் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகையின் போது சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்துடன் மோதுவதைத் தவிர்க்கவும் படக்குழு வெளியீட்டை ஒத்திவைத்தது.


அதுமட்டுமின்றி, படத்தின் தலைப்பு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டிலும் கடைசி நேரச் சிக்கல்கள் எழுந்தன. ஆரம்பத்தில் ‘OM Chapter 1: Udhiram - The Blood Wood’ எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படத்திற்குத் தணிக்கைக் குழுவின் எதிர்ப்புகள் எழுந்ததால், ‘O.M: Operation Mole’ எனத் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டது. இந்தத் தணிக்கைச் சிக்கல்களால் படத்தின் ட்ரெய்லர் வெளியீடும் சற்றுத் தாமதமானது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


இத்தனை தடைகளையும் கடந்து, செம்மரக் கடத்தல் பின்னணியில் விறுவிறுப்பான ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்திற்கு, தற்போது காலை 6 மணி சிறப்புக் காட்சி அனுமதியும் கிடைத்திருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் சென்னை, செஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளில் விநியோகஸ்தர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையும் முடிவுக்கு வந்துள்ளதால் படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாவது உறுதியாகி உள்ளது.