தனுஷ்கோடி மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை ஆமைகள்.. என்ன செய்தார்கள் தெரியுமா

Su.tha Arivalagan
Dec 03, 2025,02:05 PM IST

- க. சுமதி


தனுஷ்கோடி: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியைச் சேர்ந்த மீனவர்கள் வலையில் அரிய வகை ஆமைகள் சிக்கின. ஆனால் அதை மீண்டும் கடலிலேயே விட்டு விட்டனர் மீனவர்கள்.


தனுஷ்கோடி, மண்டபம், பாம்பன், தங்கச்சி மடம் போன்ற கடற் பகுதிகளை விட்டு டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததால் கடல் இயல்பு நிலையை அடைந்தது. இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு இன்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.


இப்பகுதி மீனவர்கள் வலைகளில் அவ்வப்போது அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் சிக்குவதுண்டு. அதை அவர்கள் கரைக்குக் கொண்டு வர மாட்டார்கள். விற்கவும் மாட்டார்கள். மாறாக, அவ்வாறு கிடைக்கும் உயிரினங்களை மீனவர்கள் மீண்டும் கடலிலேயே திருப்பி விட்டுவிடுவர்.




அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மீனவர்கள் வலையில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் வாழும் அரிய வகை உயிரினமான நான்கு சித்தாமைகள் உயிருடன் சிக்கின. உயிருடன் சிக்கிய ஆமைகளை மீட்டெடுத்து முதலுதவி செய்து பத்திரமாக மீண்டும் கடலிலேயே விட்டனர் அப்பகுதி மீனவர்கள். 


இதனை மீனவர்கள் காணொளியாக சமூக வலைத்தளங்களின் பதிவிட்டதை அடுத்து வனத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)