ஆறுதல் வெற்றியில் தோனி செய்த புதிய சம்பவம்.. பல காலத்திற்கு நின்று பேசப் போகும் சாதனை!

Su.tha Arivalagan
May 08, 2025,01:55 PM IST

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் MS தோனி IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். அவர் IPL போட்டிகளில் 200 விக்கெட்டுகளை ஸ்டம்ப்பிங் மற்றும் கேட்ச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார்.


அது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் 100வது முறையாக நாட் அவுட்டாகவும் இருந்து புதிய சாதனையையும் படைத்தார் தோனி. ஐபிஎல் போட்டிகளில் அதிக அளவில் நாட் அவுட் ஆனது தோனி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


நூர் அகமது பந்துவீச்சில் சுனில் நரைனை ஸ்டம்பிங் செய்து 26 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் தோனி. இதுவே அவரது 200-வது விக்கெட்டாக அமைந்தது. அதே ஓவரில் அங்க்ரிஷ் ரகுவன்ஷியின் கேட்சையும் அவர் பிடித்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளும் அவரது சாதனையை மேலும் உயர்த்தியது. இந்த போட்டிக்கு முன்பு தோனி 198 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது 153 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டம்பிங்குகளுடன் மொத்தம் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.




முன்னதாக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியடைந்து, IPL பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. CSK அணி KKR அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் KKR அணியின் பிளேஆஃப் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது.


179 ரன்கள் எடுத்த கொல்கத்தாவின் ஸ்கோரை சென்னை அணி சிறப்பாக சேஸ் செய்து, 180 ரன்கள் இலக்கை 19.4 ஓவர்களில் எட்டியது. டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஷிவம் துபே 45 ரன்களும், கேப்டன் MS தோனி 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.


KKR அணியின் பந்துவீச்சாளர் வைபவ் அரோரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


முதலில் பேட்டிங் செய்த KKR அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 48 ரன்கள் எடுத்தார். ஆண்ட்ரே ரசல் 38 ரன்களும், மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 36 ரன்களும் எடுத்தனர். CSK அணியின் பந்துவீச்சாளர் நூர் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.