புலரும் காலைப்பொழுதினிலே
Aug 20, 2026,11:50 AM IST
- டிலாணி ஸ்ரீதரன்
செவ்வானில் ஆதவனின் வருகையிலே
அல்லலும் விலகிட!
செங்கதிரோனின் சுடர் படர
செந்தாமரையாள் மலர!
செக்கச் சிவந்த சேலையை
மையல் கொண்ட வானும் உடுத்திட!
செந்தமிழ் சொற்களிலே விழிக்கும்
உயிர்களும் உறவாடிட!
செவ்விதழ் கதிரொளியில்
நீர் நிலைகளும் நிலை தடுமாற!
செம்மண்ணில் விளைந்த மரங்களுக்கிடையே
கிரணம் பட்டு நளினமுற!
செவ்வாழை இதழ் அழகியின் சிரிப்பினிலே
இயற்கையும் தலையசைக்க!
செங்குருதி ஓட்டத்திலே
சீறிப்பாயும் சுறுசுறுப்பும் சேர்ந்திட!
செழிக்கும் நாடும் களிக்கும் வீடும்
உன் வரவினிலே இச்சையுறக் கண்டேன் பகலோனே!