பொன்னான நாளாகப் பூத்ததோ?
- டிலாணி ஸ்ரீதரன்
மதியழகை இரசித்த சிறு முகிலினங்கள்
சிறிது ஓய்வெடுக்க புறப்பட்டதோ?
கடலழகை முகர்ந்த கதிரவனின் சிந்தை தெளிந்து
விந்தை புரிந்ததோ?
கதிரழகை கண்ட தாமரையும் தலையசைத்து
வரவேற்று மகிழ்ந்ததோ?
சிலையழகை தரிசிக்க கோபுரத்தின் உச்சியில்
சூரியனும் வானவீதி அமைத்ததோ?
இலையழகை இறுகப் பற்றிய பனித்துளியும்
இதழுக்கு விடுதலை தந்ததோ?
காற்றழகை மெருகூட்ட
கற்றைக்கதிர் பரப்பி
ஒற்றை ஆதவனும் உலாவந்ததோ?
காலையழகை எடுத்துரைக்க
காது குளிர அலகசைவில்
புள்ளினங்கள் பாடியதோ?
விழியழகை பருகிய இமைகளும்
தன்னிலை மறந்து முன்னிலையில் துடித்ததோ?
கட்டழகை தஞ்சமாக்கிய மஞ்சத்தை
பரிதியொளி
சாளரத்தில்
எட்டிப் பார்த்ததோ?
கலையழகை திரட்டிட
கிளையழகைக் கொண்டு மரங்கள் நடனம் ஆடியதோ?
மொழியழகை கொஞ்சிடும் மழலையழகு
அன்னை மொழியை விஞ்சியதோ?
வாழ்வியலை தொடங்கிட
ஒவ்வொரு நாளும் பொன்னான நாளாகப் பூத்ததோ?
புவியழகை வியந்துப் பாடிட புராணக் கதைகளும் போதாதோ?
படைப்பழகை வர்ணிக்க
பிரம்மனும் கவிஞர்களின் எழுதுகோலிடம் தோற்று விடுவாரோ?