எங்கிருந்து வந்தது??
- டிலாணி ஸ்ரீதரன்
மண்ணுலகம் தழைக்க பொழியும் மழையும்
விண்ணுலகத்திற்கு பயணித்தது எங்கிருந்து?
இல்லத்தை அலங்கரித்து உள்ளத்தைக் கவர்ந்த தளபாடங்களும்
தலையெடுத்தது எங்கிருந்து?
அடிப்படைத் தேவைகளும் வெளிப்படையாக உருமாறி
உயிரைக் காக்க வந்தது எங்கிருந்து?
முதலாளித்துவத்தின் தொழிற்சாலைகளில் முதுகெலும்பாகி
தொழிலாளிகளை
வதைக்க உதவும் உலோகங்கள் கண்டறியப்பட்டது எங்கிருந்து?
அடுப்படியும் அன்றாடம்
விருப்பப்படி விருந்தை குழப்படியில்லாமல் தர
எரிவாயுவை ஈன்றது எங்கிருந்து?
சொகுசு வாகனங்களும்
முரசு கொட்ட முக்கிய பங்களிக்கும் எரிபொருள்களும்
மலர்ந்தது எங்கிருந்து?
கட்டிடங்களும் மாடி வீடுகளும் வானம் பார்த்து வளர்ந்து நிற்க உதவும்
கட்டுமான பொருட்களும் விளைந்தது எங்கிருந்து?
வித்தைக் காட்ட சொத்தாய் சேர்க்கும் ஆபரணங்களின் மூலதனம்
அணி வகுத்தது எங்கிருந்து?
புவிக்குள் இருந்து கிடைத்த புதையல்களை
கருவிக்குள் புகுத்த வரம் கிடைத்தது எங்கிருந்து?
விஞ்ஞானத்தின் வளர்ச்சியென்று
மெய்ஞானத்தை
மறந்து செயல்பட புத்தி வந்தது எங்கிருந்து?
பூமிக்கு கீழே கிடைத்த
கருவூலங்களைக் கொண்டு பூமிக்கு மேலே ஆடும் ஆட்டத்தின் அஞ்சானத்தை
தமிழைக் கோர்த்து தலை குனிந்து
பேதையிவள் வரைந்தாள் அவளின் தூவலிலிருந்து....