வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!
- டிலாணி ஸ்ரீதரன்
தூங்குறது மூணு மணி
எழும்புறது ஆறு மணி
வாங்குவது என்னவோ வரைமுறை தான்,
நிம்மதியான தூக்கம் மூணுவேள சாப்பாடு
அசதியானால் கொஞ்சம் ஓய்வு கிடைக்காதானு
ஏக்கந்தான்
அதிகாலை எழும்பணும்
அலாரமே தேவையில்லை
விடியலைத் தேடாத
விழியும் பாவந்தான்
திரும்பும் பக்கமெல்லாம் வேலை
தினந்தோறும் திட்டு ...
விரும்பி வந்தோமே
விதின்னு கெடக்கத்தான்,
வரவுக்கு மீறிய உழைப்பு வந்தாலும்
களைப்பு சிறகடித்து பறக்கணும்
சிட்டாக நாங்களுந்தான்,
சாப்பாட கையில் எடுத்தால்
சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள
கூப்பாடு போடும் முதலாளி வர்க்கந்தான்!
அறுசுவை சமைச்சு சமைச்சு அடுப்பும் களைச்சிடும்
மறு சுவை கேட்டு வாயும் நம நமக்கும்,
பாத்திரம் தேச்சு தேச்சு கையும் ஊறிப்போகும்
சாஸ்திரம் பார்க்கும் ரேகை எல்லாமே தேஞ்சிப் போகும்
வெள்ளிக்கிழமை வந்தா துள்ளுறது நிக்காது
கிள்ளியும் தான் பாக்கணும்
உயிரோட இருப்பது கனவா நனவானு,
கருணையோடு பேசினாலும் கட்டிப்பிடித்து கொஞ்சினாலும்
வர்ணனையோடு சொல்லுவது வேலைக்காரின்னு தான்,
சொல்ல முடியாத வேதனைகளும் சொல்லில் அடங்காத சோதனைகளும்
குருதி உறைச்சி சொல்லும் உழைப்பாளிகள் நாங்கள்தான்,
வீட்டு கஷ்டம்னு வீராப்பா நிக்கிறோம்
நாட்டை விட்டு வந்து நாதியற்றுக் கிடக்கிறோம் ,
கண்ணீராலே கவலைகளை கழுவுறோம்
கட்டிப்பிடிச்சே தலையணைய நனைக்கிறோம்,
வருடமே ஓடினாலும் நினைச்சது என்னவோ நடக்கல
நேத்தி வச்ச மாதிரி பல வருடம் சாகுறோம்,
வீட்டுக்கு போகையில வயசும் போயிரும்
விட்டதெல்லாம் புடிக்கனும்னா நெனச்சா
கனவுல தான் நடக்கும்,
நினைவுகள் மட்டுமே நெஞ்சில் நீங்காமல் தங்கும் ...
தீராத சோகம் எல்லாம் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாகிடும்.
வெளிநாட்டு வாழ்க்கைனா சும்மாவா???
சிலர் கேட்பது என்னவோ
"உங்களுக்கு என்ன வெளிநாட்டில் இருக்கீங்க!"