கருவினிலே கற்றுக் கொடுங்கள்

Su.tha Arivalagan
Jun 13, 2026,12:19 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


பெற்றோர்களின் தலைச்சிறந்த கடமைகளை ஈன்றெடுத்த பிள்ளைகளுக்கும்,

உறவுகளின் அருமைதனை சுற்றியிருக்கும் உற்றார் உறவினர்களுக்கும்,


கற்றோரின் சிறப்புதனை கானலாய்க் கல்வியை வெறுப்போருக்கும்,

பிறப்பின் வலிமைதனை  நம்முடன் பிறந்தோருக்கும்,


எழுத்துகளின் கோர்வை எட்டுத்திக்கும்  கவியாகப் பரவிக் கிடப்பதையும், 

எடுத்து நீயும் சுவாசிக்க உன்னை உயர்த்தியே விழி திறக்கச் செய்யுமென்பதையும்




இறப்பின் மர்மத்தை இழிவான செயலைச் செய்வோருக்கும்,

கற்பின் புனிதத்தை வேரோடு கருவறுக்கும் கயவர்களுக்கும், 


அருவருப்பை நாடுபவர்களுக்கு அடுத்த பிறவியின் பயனையும், 

முறைக்கேடாக வாழ வழி தேடுபவர்களுக்கு சட்டத்தின் வாய்மையையும்,


மூளை சலவையாளர்களுக்கு விஞ்ஞானத்தின் விந்தையான வளர்ச்சியையும்,

வளரும் தலைமுறையை ஒழிப்பவர்களுக்கு சிசுக்களின் மகத்துவத்தையும்,


பாலியல் வன்முறையை வளர்ப்பவர்களுக்கு அணங்குகளின் அல்லலையும், 

பெண்களைத் தீண்டும் காளையர்களுக்கு பெண்மையின் மாண்பையும்,


ஆண்களை ஏமாற்றும் கன்னியர்களுக்கு ஆணின் அருமையையும்,

வியர்வை சிந்தும் உழைப்பின் உயர்வை ஊதாரிகளுக்கும்,


யாசகராகும் விதியை மதிகெட்ட மாந்தர்களுக்கும், 

அனாதைகளின் மனக்குமுறலை இச்சையைத் தீர்க்கும் தரங்கெட்டவர்களுக்கும்,


வாழா வெட்டியாகும்

அபலைகளுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தையும், 

பொத்திவச்சு வளர்த்த பெற்றோரை விட்டு செல்லும் புத்தி கெட்ட குணத்தின் கேவலத்தையும், 


விவாகரத்தாகும் தம்பதியர்களுக்கு 

காலத்தின் பொன்னான நேரத்தையும்,

வீண் விவாதங்கள் செய்யும் மாமியார் மருமகளுக்கு கூட்டுக் குடும்பத்தின் தன்மையையும், 


காமம் தேடும் காதலுக்கு 

அன்பின் உண்மையான உணர்வையும்,

ஆறுதல் கூறுவது போல் 

அசிங்கப்படுத்துபவர்களுக்கு நட்பின் உன்னதத்தையும்,


நமக்கென என்றே செல்பவர்களுக்கு குமூகத்தின் பாதுகாப்பையும், 

சங்கங்கள் அமைத்து பங்கங்கள் ஏற்படுத்துபவர்களுக்கு 

வரலாற்றின் முக்கியத்துவத்தையும், 


போதை என்று பாதை தெளியாதவர்களுக்கு உபாதைகளின் உச்சத்தையும், 

பேதையென்று  அடிமைப் படுத்துபவர்களுக்கு மாதுவின் தவங்களையும், 


இளமையில் தாங்க வேண்டிய சுமைகளின் பொறுப்புகளையும்,

முதுமையில் கடக்க வேண்டிய வெறுப்புகளின் நிமிடங்களையும்,


வேறெங்கும் உணர்த்த தேவையில்லை. 

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் உதிரத்தில் உறைந்து!


கருவறையில் நுட்பமாக நுழைந்து சிற்பமாக வெளியே வருகின்றான்!


கருவை தாங்கும் கணத்திலிருந்து  வெளியுலகத்தின்

இயக்கங்களையும் தாக்கங்களையும்,


ஏக்கமாக தொப்புள் கொடி உறவுடன் இணைந்துவிட 

வயிற்றின் மேல் கை வைத்து தன் கருவிடம் சொல்லி சொல்லி வளர்த்து விடுங்கள்.....


சொர்க்கமான பூமியை நீயாவது இந்த உலகத்திற்கு தந்துவிடு என்று.....