Amma is not a word.. but Emotion: உயிரின் மறு வடிவம் அம்மா!!
- டிலானி ஸ்ரீதரன்
வரமொன்று கேட்டு தினமொன்று நினைத்து
வயிற்றில் கருவாகக் கேட்பாள் நம்மை,
மாதவிடாயும் தள்ளிப்போக
மனசெல்லாம்
மத்தாப்பாய்
பொறிந்து
சிந்தனையில்
செதுக்குவாளெம்மை,
வந்துவிட்டேன் என்று
வாந்தியாய் நீ அறிகுறி காட்டிட மகிழ்வாக கசக்குவாள் கண்ணை,
வாயிலுணவு வைக்க வயிற்றை சுருட்டிப் பிடிக்க
வாந்தியாய் சிந்த வருமே வேதனை,
வயிற்றுக்கும் நெஞ்சுக்கும்
நித்தமும்
யுத்தமானாலும்
நொடிக்கொருமுறை
தொட்டு ரசிப்பாள் எம்மை,
குடும்ப சுமையும் தாங்க இடைவிடாது வேலையும் அழைக்க இடையிடையே
கதைப்பேச இதமாக நகர்வோம் நாமுமே ,
நுட்பமாய் தொட்டு ரசித்து தெப்பமாய் ஆனந்தக் கண்ணீர் வடித்து
மகிழ்வாள் அன்னை,
முத்தத்தை கையில் அஞ்சலாக்கி நெஞ்சத்தில் ஒட்டித் தைத்துக்
கொள்வாள் எம்மை,
இடுப்பு வலியும் இறுக்கிப் பிடிக்க தலைச்சுற்றும் இணைந்தே வர
இதழோரம் புன்னகைத்து
வயிற்றிலிடுவாள் எண்ணை,
வைத்தியம் ஆயிரம் செய்தாலும் வலிகள் குறைவதே இல்லை
வலிப்பொறுத்து
விழிப் பிதுங்கினாலும்
ஆறுதலாக்குவாள் தன்னை,
அடி மடியில் தாங்கியதிலிருந்தே ஆயக்கலைகளையும் வாய்மொழியாகக்
கற்றுக் கொடுப்பாள்
இதென்ன விந்தை,
தூக்கத்தை தொலைத்து
அசையும் உணர்வுகளையும்
அசையாமல்
பார்த்து வியப்பாள்,
நிறைமாதம் வரை
நாளும் வேதனைகள்
தாங்கி சிந்தனயில் மூழ்கி
பெற்றெடுப்பாள் பிள்ளை,
மடியில் தவழும் போது
சேர்த்து வைத்த ரணங்களை
சிரிப்பாக்கி
முத்தமாக பொழிவாள்,
அம்மாவின் அகராதியில்
ஓய்வென்ற பக்கத்தை ஒதுக்கித் தள்ளியவள்,
கருவறைத் தொடங்கி கல்லறை வரை ஓய்வில்லாமல்
ஓடும் கடவுளாக வந்த வரம் தாய்,
தாயாக மாறிய போதே நானும் உணர்ந்தேன்
தாயின் அருமை,
தாய்மை தாங்கும் பெண்மையின்
உணர்வை ஈடுசெய்ய
எவராலும் முடியாது
முழுமையாக
உணரும் வரை...
வாழ்வின் உயிர் நாடியான
தாய்மையை போற்றுவோம்
பெண்ணினத்தைக்
காப்போம்.