Tamil Puthandu: அகம் மகிழ்ந்திட அழிவுகளை நீக்கிட.. சித்திரை மகளே வா!
- டிலாணி ஸ்ரீதரன்
அகம் மகிழ்ந்திட
அழிவுகளை நீக்கிட
ஆனந்தம் பெருகிட
ஆணவம் அழித்திட
இன்பத்தை கூட்டிட
இன்னல்களை களைத்திட
ஈருலகம் போற்றிட
ஈனச்செயல்களை
பொசுக்கிட
உறவுகளை சேர்த்திட
உறங்கி கிடப்போரை எழுப்பிட
ஊக்கமதை தந்திட
ஊனமென்ற எண்ணத்தை
ஒழித்திட
எண்ணங்களை வண்ணங்களாக்கிட
எதிரிகளில்லாத உலகமாக்கிட
ஏக்கங்களை நிறைவேற்றிட
ஏழ்மை நிலையை
அகற்றிட
ஐங்குரவரும் வாழ்த்திட
ஐயத்தை தளர்த்திட
ஒற்றுமையை பலமாக்கிட
ஒரு மனதாக
வேற்றுமை
மறந்திட
ஓங்கியே புகழ் பரவிட
ஓட்டைக் குடில்களுக்கும்
விடிந்திட
ஒளவையைப் போல்
நீடுழி வாழ்ந்திட
ஒளடதமாய் நோய் நொடிகளை விரட்டிட
அஃதே அகர
வரிசையில் கவிதையினை
படைத்தேன்....
அன்போடு வந்துவிடு...
ஆரவாரம் தந்துவிடு ....
கருணையை பொழிந்து விடு....
களியாட்டங்களைக்
கண்டு விடு....
களிப்புற செய்துவிடு....
கனிவான பயணத்தை
தொடக்கிவிடு....
சிறப்புடன் வந்துவிடு
சித்திரை மகளே.....
தமிழ் மகளே வந்துவிடு....
தரணியை வளம் பெற
செய்து விடு...!