எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது அஜித்தை வைத்து படம் இயக்குவேன்: லோகேஷ் கனகராஜ்
சென்னை: அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது கண்டிப்பாக படம் பண்ணுவேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இன்று அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரஜினியின் ரசிகர்கள், பட வெளியீட்டை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்தியா உட்பட 100 நாடுகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் இணையதள பக்கங்களில் பாசிட்டிவ் ரிவ்யூக்களை பதிவிட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து படம் குறித்து ரசிகர்கள் பாசிட்டிவ் ரிவ்யூக்களையே பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூலி படத்தின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. கைதட்டல்கள்தான் இதற்கான பதில்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது கண்டிப்பாக படம் பண்ணுவேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை உள்ளது. என்று தெரிவித்திருக்கிறார்.