தனுஷின் அரசியல் கட்சிக் கொடி சர்ச்சை : இயக்குநர் சுப்ரமணிய சிவா விளக்கம்

Su.tha Arivalagan
Jul 09, 2026,11:34 AM IST

சென்னை: திரையுலகில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் தனுஷின் "கொடி சர்ச்சை" குறித்து, பிரபல திரைப்பட இயக்குநர் சுப்ரமணிய சிவா தற்போது மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற 'அர்ஜுனன் பேர் பத்து' திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தீயாய் பரவி வரும் இந்தக் கொடி சர்ச்சை குறித்துப் பேசி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பல உண்மைகளை உடைத்துள்ளார்.


விழாவில் இந்த சர்ச்சை குறித்து மேடையில் பேசிய இயக்குநர் சுப்ரமணிய சிவா, "தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அந்தக் கொடி, ஏதோ இன்று நேற்று உருவானது அல்ல. அது கடந்த 15 வருடங்களாக எங்களிடம் இருக்கக்கூடிய ஒரு கொடி தான். பொதுவாக, தனுஷின் திரைப்படங்கள் வெளியாகும் போது, ரசிகர்களாகிய நாங்கள் அந்தப் பட வெளியீட்டு விழாக்களில் இந்தக் கொடியை வைத்துத்தான் தோரணம் கட்டுவது வழக்கம். இது தனுஷ் ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான்" என்று கூறினார்.




இந்த முறை இந்த விஷயம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறியதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். "இந்த முறை ஒரு கூட்டத்திற்கு வந்த சிலர், வழக்கமாகத் தோரணம் கட்டப் பயன்படுத்தும் கொடியை விடுத்து, காரில் மாட்டுவது போன்ற வடிவில் ஒரு கொடியைத் தயார் செய்து எடுத்து வந்தார்கள். காரில் பறக்கவிடும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்ததால், அதைப் பார்த்த பலரும் இது தனுஷ் புதிதாக அறிமுகப்படுத்திய அரசியல் கொடி எனத் தவறாகப் புரிந்துகொண்டனர். இதுவே இந்த வதந்திகள் பரவுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்று சுப்ரமணிய சிவா தெளிவுபடுத்தினார்.


தனுஷின் அரசியல் வருகை குறித்தும், இந்தக் கொடியின் பின்னணியில் அரசியல் எண்ணங்கள் ஏதேனும் உள்ளதா என்றும் செய்தியாளர்கள் மத்தியில் எழுந்த கேள்விக்கு, அவர் மிகவும் சுவாரசியமான, ரஜினி பாணி பதிலை அளித்தார். "எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்" என்று சூசகமாகக் குறிப்பிட்ட அவர், தனுஷின் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளார்.


'அர்ஜுனன் பேர் பத்து' பட விழாவில் சுப்ரமணிய சிவா கொடுத்துள்ள இந்த அதிரடி விளக்கம், தனுஷ் ரசிகர்களிடையே இருந்த குழப்பங்களைத் தீர்த்துள்ளது. அதே வேளையில், "எது எப்போது நடக்குமோ அது நடக்கும்" என்ற அவரது வார்த்தைகள், தனுஷின் அரசியல் என்ட்ரி குறித்த விவாதங்களை முழுமையாக அணைக்காமல், ஒரு புதிய எதிர்பார்ப்பு நெருப்பைத் திரையுலகில் மூட்டிவிட்டுள்ளது என்றே கூற வேண்டும்.