தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்

Su.tha Arivalagan
Nov 02, 2026,05:29 PM IST

சென்னை : வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி தடையின்றி சென்று வர தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்காசி மற்றும் கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.   


ரயில் இயக்க விவரங்கள்:


சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி: நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.   

தாம்பரம் - தென்காசி: நவம்பர் 7-ஆம் தேதி காலை 5.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு தென்காசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.   கன்னியாகுமரி - சென்னை எழும்பூர்: பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக, நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.   

செங்கோட்டை - தாம்பரம்: நவம்பர் 9-ஆம் தேதி மதியம் 3.00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.   


முன்பதிவு நாளைத் தொடக்கம்:




இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (03.11.2026) தொடங்குகிறது. பயணிகள் IRCTC இணையதளம், செயலி அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலம் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வழக்கமான ரயில்களில் பயணச்சீட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், இந்த கூடுதல் சிறப்பு ரயில்களின் அறிவிப்பு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் விரைவாக முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 08ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புபவதற்கு வசதியாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 09ம் தேதியன்று தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.