தீபாவளி பலகாரம் கடையில் வாங்கப் போறீங்களா? உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை

Su.tha Arivalagan
Nov 02, 2026,12:50 PM IST

சென்னை : தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை மற்றும் இனிப்பு, கார பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். மக்கள் அனைவரும் பண்டிகையைக் விமரிசையாகக் கொண்டாட கடைகளில் தீபாவளி பலகாரங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலைமையில், பண்டிகைக் காலத்தில் விற்பனையாகும் பலகாரங்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத் துறை முக்கிய அறிவிப்பு மற்றும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.   


தரமான பலகாரங்கள்: 


தீபாவளிக்காகப் பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்களை கடைகளில் வாங்கும் போது பொதுமக்கள் பின்வரும் விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது:   


பேக்கிங் விபரங்கள்: 


பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்களை (Packed Foods) வாங்குவதற்கு முன், அதில் தயாரிக்கப்பட்ட தேதி (Manufacturing Date) மற்றும் உண்ணத் தகுந்த காலம் / காலாவதியாகும் தேதி (Expiry Date) ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.   


தரச் சான்று (FSSAI): 




பதிவு பெற்ற அல்லது உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் கடைகளில் மட்டுமே தின்பண்டங்களை வாங்க வேண்டும்.   


செயற்கை நிறமிகள்: 


பலகாரங்களில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்கவும்.   


குறைபாடுகள் குறித்து புகார் அளிக்க வழிகள் :


நீங்கள் வாங்கும் தீபாவளி பலகாரங்களின் தரம் திருப்திகரமாக இல்லை என்றாலோ அல்லது அதில் ஏதேனும் குறைபாடுகள் மற்றும் கலப்படம் இருப்பது தெரிய வந்தாலோ, பொதுமக்கள் உடனடியாக உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.   


பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டிய விவரங்கள்:   

வாட்ஸ்அப் புகார் எண்: 9444042322   

அரசு இணையதளம்: foodsafety.tn.gov.in   

கைப்பேசி செயலி: TN Food Safety Consumer App   


பொதுமக்கள் தங்கள் புகார்களை மேற்கண்ட வாட்ஸ்அப் எண், இணையதளம் அல்லது பிரத்யேகமான மொபைல் செயலி வாயிலாகத் தெரிவித்தால், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் உடனடியாக உரிய ஆய்வு செய்யப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வியாபாரிகளுக்கான எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல் :


பண்டிகைக் காலத்தில் தின்பண்டங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சுகாதாரமான முறையில் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு பலகாரங்களைத் தயாரிக்க வேண்டும். மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயைப் பயன்படுத்துவது மற்றும் சுகாதாரமற்ற முறையில் பலகாரங்களைச் சேமித்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். விதிமீறல்களில் ஈடுபடும் கடைகள் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.