தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!

Su.tha Arivalagan
Sep 03, 2026,11:58 AM IST

சென்னை: வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.


பண்டிகைக் காலத்தில் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், பயணிகள் தங்களது பயணங்களை முறையாகத் திட்டமிட்டுக் கொள்ளவும் ஏதுவாக, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.


தீபாவளி பயண முன்பதிவு அட்டவணை :

இந்திய ரயில்வேயின் 60 நாட்கள் முன்பதிவு விதிமுறைகளின்படி, பயணிகள் தங்களின் பயணத் தேதிக்கு ஏற்பக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்:




நவம்பர் 5 (வியாழக்கிழமை) பயணம் செய்ய: செப்டம்பர் 6-ஆம் தேதி

நவம்பர் 6 (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய: செப்டம்பர் 7-ஆம் தேதி

நவம்பர் 7 (சனிக்கிழமை - தீபாவளிக்கு முந்தைய நாள்) பயணம் செய்ய: செப்டம்பர் 8-ஆம் தேதி

நவம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை - தீபாவளி நாள்) பயணம் செய்ய: செப்டம்பர் 9-ஆம் தேதி

நவம்பர் 9 (திங்கள்கிழமை - திரும்பும் பயணம்) செய்ய: செப்டம்பர் 10-ஆம் தேதி

நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை - திரும்பும் பயணம்) செய்ய: செப்டம்பர் 11-ஆம் தேதி


முன்பதிவு, தினமும் காலை 8:00 மணி முதல் IRCTC இணையதளம் (www.irctc.co.in), IRCTC செயலி மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்கள் மூலம் திறக்கப்படும். 


உடனடியாக டிக்கெட் பதிவு செய்ய சில முக்கிய ஆலோசனைகள் :


முன்கூட்டியே தயார் நிலை: காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதால், 7:45 மணிக்கே IRCTC தளத்தில் லாக்-இன் செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும்.


மாஸ்டர் லிஸ்ட் (Master List): IRCTC செயலியில் Master List வசதியை பயன்படுத்தி பயணிகள் பெயர், வயது, பாலினம் போன்ற விவரங்களை முன்பே சேமித்து வைத்தால், டிக்கெட் முன்பதிவின் போது நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தலாம்.


வேகமான கட்டண முறை: UPI (GPay, Paytm, PhonePe) அல்லது நெட் பேங்கிங் மூலம் உடனடியாகக் கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்வு செய்வது உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க உதவும்.


சிறப்பு ரயில்கள்: ழக்கமான ரயில்களில் டிக்கெட் கிடைக்காத பட்சத்தில், தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்படவுள்ள கூடுதல் சிறப்பு ரயில்களின் அறிவிப்புகளையும் கவனிக்கலாம்.