தேமுதிக கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
கடலூர் : கடலூரில் நேற்று மாநாட்டில் தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சஸ்பென்ஸ் வைத்து விட்டு சென்று விட்டார். ஆனால் அவரது மகன் விஜயபிரபாகரன், விஜய்க்கு மெசேஜ் சொல்கிறேன் என்ற பெயரில் யாருடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்லி விட்டு சென்றார்.
சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறீர்கள் என பல மாதங்களாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம் செய்தியாளர்கள் கேட்டு வருகின்றனர். அப்போது எல்லாம் ஜனவரியில் அறிவிப்பாம் என்றார். சமீபத்தில் அதே கேள்வியை கேட்ட போது, ஜனவரி 09ம் தேதியன்று கடலூரி தேமுதிக உரிமை மீட்பு மாநாடு நடக்க உள்ளது அதில் அறிவிப்பேன் என்றார். நேற்று மாநாட்டு துவங்கிய பிறகு, இரவு 7 மணிக்கு பிரேமலதா கூட்டணி குறித்த அறிக்க போகிறார் என செய்திகள் வெளியாகின.
பிரேமலதா எப்போது பேசுவார், கூட்டணி பற்றி என்ன சொல்லுவார், எப்போது சொல்லுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், " யாருடன் கூட்டணி என்று சொல்லட்டுமா? சொல்லட்டுமா? ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் யாருடன் கூட்டணி என சொல்லாமல் அமைதி காத்து வரும் போது நான் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டை போல் சொல்ல வேண்டும். யாருடன் கூட்டணி என்பது பற்றி பிறகு சொல்கிறேன். இதுவரை சத்ரியர்களாக இருந்தோம். இனி சாணக்கியர்களாக இருப்போம். தேமுதிக எந்த கூட்டணியில் இடம் பெறுகிறதோ அந்த கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்" என பேசி விட்டு சென்று விட்டார். இதனால் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
ஆனால் அதே மாநாட்டில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், "நாங்கள் பெட்டி வாங்கினோம். பேரம் பேசினோம் என சொல்கிறார்கள். நேரடியாக சவால் விடுகிறேன். அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். எங்களிடம் ஒரே ஒரு இனோவா கார் மட்டும் தான் உள்ளது. ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தருவது போல் பலரும் பேசுகிறார்கள். விஜய் அண்ணாவுக்கு என்னுடைய ஒரு வேண்டுகோள். அண்ணா...அவர்களை மட்டும் நம்பிடாதீங்க. உங்களை ஏமாற்றுகிறார்கள்" என விஜய்க்கு செமேஜ் சொல்லுவது போல் யாருடன் கூட்டணி என்பதை மறைமுகமாக அனைவருக்கும் உணர்த்தி விட்டு சென்று விட்டார்.
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கட்சி காங்கிரஸ் மட்டும் தான். அவர்களை நம்ப வேண்டாம், ஏமாற்றி விடுவார்கள் என்றால், காங்கிரசை நம்ப வேண்டாம் என்கிறார். காங்கிரஸ் இருக்கும் கூட்டணி, திமுக கூட்டணி. அவர்களை நம்ப வேண்டாம் என்கிறார் என்றால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு போக தேமுதிக தயாராகி விட்டது என்பதை தான் இது உணர்த்துகிறது. கண்டிப்பாக தேமுதிக தனித்து போட்டியிட போவது கிடையாது. அப்படி தனித்து போட்டி என்றால் அதை பிரேமலதா எப்போதோ கெத்தாக அறிவித்திருப்பார்.
தவெக பக்கம் செல்வாராக என்றால் அதற்கான வாய்ப்பு குறைவு தான். காரணம், தவெக.,வில் தேமுதிக.,விற்கு அதிக சீட்கள் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் செலவை ஏற்றும் அளவிற்கு தவெக பலமாக இல்லை. காங்கிரசை நம்ப வேண்டாம் என்று விஜயபிரபாகரனே கூறி விட்டார். காங்கிரஸ் இருக்கும் திமுக.,வுடன் செல்ல வாய்ப்பு இல்லை. அப்படியானால் மீதமுள்ள அதிமுக கூட்டணி மட்டும் தான். அதை தான் பிரேமலதா தேர்வு செய்வார் என சொல்லப்படுகிறது.