விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்

Su.tha Arivalagan
Apr 02, 2026,01:41 PM IST

சென்னை: கேப்டன் விஜயகாந்த் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறிய கருத்து வருத்தத்திற்குரியது. சந்தர்ப்பவாத பேச்சு என்று தேமுதிக எம்.பி. எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், தமிழ்நாடு அரசியல் குறித்து விஜய்க்கு தெரியவில்லை என்று சில கருத்துகளை முன்வைத்தார். அதோடு நிறுத்தாமல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை உருவாக்கி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் அவர்கள் குறித்தும் தவறான கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.  


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 




கேப்டன் அவர்கள் தூய்மையான அரசியலில் ஈடுபட்டு தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனது வெற்றிக் கணக்கை தொடங்கி சட்டமன்றத்தில் கால் பதித்த அவர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர். முழுக்க முழுக்க அவரது உழைப்பும், மக்கள் அவர் மீது கொண்ட அன்பும் தான் அவரது வெற்றிக்கு வித்திட்டது என்பது உலகறிந்தது.  அவருடைய தேர்தல் பாதையை, மக்களின் ஆதரவை பயன்படுத்த நினைத்த பாஜக அவரைத் தேடி வந்து கூட்டணி அமைத்தது. 


2014 ஆம் ஆண்டு முதல் கேப்டனுடன் நட்பாக பழகியவர் பியூஸ் கோயல் அவர்கள். கேப்டன் மீது நிறைந்த அன்பு கொண்டிருந்த அவரிடம் இருந்து இதுபோன்ற வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை.  மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் கேப்டன் குறித்த பியூஷ் கோயலின் இந்த பேச்சுக்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.


விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளிக்கையில் விஜயகாந்த், கமல்ஹாசன் போலத்தான் விஜய்யும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.