தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

Su.tha Arivalagan
Dec 28, 2025,01:16 PM IST

- சுமதி சிவக்குமார்


சென்னை: மக்களால் அன்புடன் கேப்டன் என்று அழைக்கப்படும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று 2ம் ஆண்டு நினைவு தினம், 2ம் ஆண்டு குருபூஜையாக அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.


கோயம்பேடு தேமுதிக தலைமைக் கழக அலுவலக வளாகத்தில்  அமைந்துள்ள விஜயகாந்த்தின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இந்த முக்கிய நிகழ்வில் கலந்து கொள்ள முதல்வர். மு.க.ஸ்டாலின், அமுதிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தெரிவித்திருந்தார். திமுக தரப்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சகிதம் வந்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் வந்து அஞ்சலி செலுத்தினர்.




காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும்  நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கேப்டன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் சிலைக்கும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இரு மகன்கள் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.


விஜயகாந்த் கொடையுள்ளத்தை‌போற்றும் வகையில் இன்று நாள் முழுவதும் நினைவிடத்திற்கு வரும் அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திரைத்துறையினர், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தேமுதிகவினர், பொதுமக்கள் என பலரும் விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சினிமா மற்றும் அரசியல் என இரு துறைகளிலும் முத்திரை பதித்த விஜயகாந்த் ஏழைகளின் பசி தீர்ப்பதையே தனது வாழ்நாளின் லட்சியமாக கொண்டிருந்தார். அவரது மறைவுக்குப் பின்னும் அவர் காட்டிய வழியில் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது அவரது புகழுக்கு மகுடம் சேர்ப்பதாக உள்ளது.


இது தவிர தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி  தங்கள் தலைவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.