ஒரு கார் வாங்க எங்களுக்கு தகுதி இல்லையா?...பிரஸ்மீட்டில் கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை : தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சமீபகாலமாகத் தனது குடும்பத்தினர் புதிய சொகுசு கார் வாங்கியது தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மிகக் காட்டமான பதிலை அளித்துள்ளார். திருப்பதிக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம் :
திமுக கூட்டணியில் தேமுதிக.,விற்கு எத்தனை சீட்கள் என்பது குறித்து ஆலோசிப்பதற்காக தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் திமுக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேமுதிக.,விற்கு ஆதரவான வாக்கு பலம் உள்ளது. அதனால் நாங்கள் திமுக தலைமையிடம் எங்கள் பலத்திற்கு ஏற்ற சீட்டுகளை கேட்டு பெறுவோம். ஓரிரு நாட்களில் திமுக.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும். இன்று பகல் 3 மணிக்குள் புதுச்சேரியில் எந்த தொகுதியில் தேமுதிக போட்டியிட போகிறது, யார் வேட்பாளர் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி :
சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த், தனது மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியனுடன் புதிய கார் ஒன்றில் திருப்பதிக்குச் சென்றார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, தேர்தல் நேரத்தில் இவ்வளவு விலை உயர்ந்த காரா? என்ற ரீதியில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாவது:
"நாங்கள் இந்த வாகனத்தை வாங்கி ஒன்றரை வருடத்திற்கும் மேலாகிறது. நாங்கள் அந்த காரில் இப்போது திருப்பதிக்குச் சென்றால், ஏதோ இப்போது தான் புதிதாக வாங்கியதைப் போலச் சித்திரிக்கிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல்."
கேப்டனின் தியாகமும் உழைப்பும் :
தொடர்ந்து பேசிய அவர், தனது கணவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உழைப்பைப் பற்றிக் குறிப்பிட்டார். "ஒரு கார் வாங்குவதற்குக் கூட கேப்டன் குடும்பத்திற்குத் தகுதி இல்லையா? தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை மக்களுக்கு உதவி செய்வதற்காகவே செலவு செய்தவர் கேப்டன். அவர் வழியில் வந்த அவரது குடும்பத்தினர் கார் வாங்குவதைப் பெரிய விஷயமாகப் பேசுவது முறையல்ல" என ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 21 வருட கட்சியான தேமுதிக பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் கட்சியை அவமானப்படுத்துகிறார்கள். பேரம், பெட்டி என சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லுவதில் 1 சதவீதம் கூட உண்மையில்லை என்றார்.
தேர்தல் களம் 2026 :
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களுக்கு இந்த பதிலடி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேமுதிக தொண்டர்கள் மத்தியில் இந்தப் பேச்சு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்திருப்பதாகவும், கட்சியின் தீவிர விஸ்வாசிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாக சொல்லப்படுகிறது.