என்ன நடக்கிறது... கூட்டணி மாறுகிறதா?... தேஜ கூட்டணி தலைவர்களுடன் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்!
சென்னை: சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் பாஜக தரப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்த கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று உள்ளார். பொதுவாக ஜனவரியில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேமுதிக, பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து ஒன்று பரவி வந்தது. இது குறித்து தேமுதிக எந்த தகவலையும் வெளியிடாமலும், கூட்டணி குறித்த செய்தி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் அருகிலேயே அவர் அமர்ந்திருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.