தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனது கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பதை கடைசி நிமிடம் வரை ரகசியமாக வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுகுறித்துப் பேசினார். அப்போது, அரசியல் சூழல் மிகவும் நிலையற்றதாக இருக்கிறது. எனது கட்சியின் இறுதி முடிவு சரியான நேரத்தில் அறிவிக்கப்படும். இந்த அறிவிப்பு ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் கடலூர் மாநாட்டிற்கு முன்போ, அப்போதோ அல்லது அதற்குப் பிறகோ கூட வரலாம்.
எங்கள் கூட்டணி முடிவு கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று சொன்னோம். அது அப்படியேதான் இருக்கும். ஆனால், ஜனவரி 9 ஆம் தேதிக்கு முன்போ, அப்போதோ அல்லது அதற்குப் பிறகோ கூட நாங்கள் அதை அறிவிக்கலாம் என்றார் அவர்.
தங்களது முடிவை சஸ்பென்ஸாக வைத்திருப்பதன் மூலம் பேர அரசியலை தேமுதிக கையில் எடுத்திருப்பதாகவும் கருதப்படுகிறது. அதேசமயம், வலுவான கூட்டணியில் இடம் பெறுவதையும் முக்கியமாக கையில் எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது. காரணம் இந்தத் தேர்தலானது தேமுதிகவுக்கு வாழ்வா சாவா போராட்டம் போல மாறியுள்ளது. விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திக்கப் போகும் மிகப் பெரிய முதல் தேர்தல் என்பதாலும் பிரேமலதா நிதானம் காக்கிறார்.
தேமுதிக கிட்டத்தட்ட எல்லா முக்கியக் கட்சிகளுடனும் தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள். அதிமுக, பாஜக, தவெக, திமுக என எல்லாப் பக்கமும் தொடர்புகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது. கூட்டணியில் இணைய விரும்பும் எல்லாக் கட்சிகளும் செய்வதுதான் இது. இதில் புதுமை இல்லை.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 14–20 தொகுதிகளையும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் 23–30 தொகுதிகளையும், தவெகவுடன் உடன் இணைந்தால் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளையும் தேமுதிக கேட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதில் திமுக அதிகபட்சம் 9 தொகுதிகள் கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட்டையும் மட்டுமே வழங்கத் தயாராக உள்ளதாம். இதனால்தான் பிரேமலதா விஜயகாந்த் முடிவெடுக்க முடியாமல் உள்ளதாக சொல்கிறார்கள்.