2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

Meenakshi
Jan 13, 2026,05:39 PM IST

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும், அதன் பிறகு கூட்டணிகளில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் வைத்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், தேமுதிகவைப் பொறுத்தவரை தொண்டர்களின் விருப்பமே எனது விருப்பம். விஜயகாந்த் காட்டிய வழியில், தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தும் கட்சியுடன் மட்டுமே எங்களது கூட்டணி அமையும். கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது, ஆனால் கதவுகள் திறந்தே இருக்கின்றன. தேமுதிக மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதனை நாங்கள் பரிசிலித்து வருகிறோம். 




நான் மாநாட்டில் சொன்னதைத் தான் இப்பவும் சொல்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும், தை மாதத்திற்கு பிறகு கூட்டணிகளில் மிகப்பெரிய மாற்றம் வரும். உறுதியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் மகத்தான ஒரு கூட்டணியை நாட்டிற்கும் மக்களுக்கும் கொடுக்கும். நாங்கள் அமைக்கும் கூட்டணி மக்களுக்கு நல்லதை செய்யும். கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை வெளியிடுவோம். இன்று வரைக்கும் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் திமுக இன்று வரை இறுதி கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்காமல் உள்ளது. அதே போன்று எதிர்கட்சியில் இருக்கும் அண்ணன் எடப்பாடியாரும், மத்தியில் இருக்கும் பாஜகவினரும் தங்களது கூட்டணி குறித்து இறுதி முடிவை இன்னும் தெரிவிக்க வில்லை.


தை பிறந்தவுடன் தமிழ்நாட்டில் நிறை மாற்றங்கள் நிகழும். 234 தொகுதியிலும் நின்று ஜெயிக்கக்கூடியவர் கேப்டன். அவர் மக்கள் தலைவர்.கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களை அழைத்துப் பேசுவோம். உங்கள் எதிர்பார்ப்பு, அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.