"இனி கூட்டணி வேண்டாம், தனித்துப் போட்டியிடுவோம்!" – ஆ.ராசா அதிரடி பேச்சு

Su.tha Arivalagan
Jun 25, 2026,04:45 PM IST

சென்னை: "இனி யாருடனும் திமுக கூட்டணி வைக்கத் தேவையில்லை; வரவிருக்கும் தேர்தல்களில் திமுக 234 தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றிபெறும் என்று அறிவியுங்கள்" என அக்கட்சியின் எம்.பி., ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிரடியான கோரிக்கை விடுத்துள்ளார்.


திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கூட்டணிக் கட்சிகள் குறித்துப் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்கு ஆ.ராசா கண்டனம்


சமீபத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக எம்பி ஆ.ராசா உரையாற்றினார். அப்போது கூட்டணிக் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.


அவர் பேசுகையில், "ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், திமுகவுடன் கூட்டணியே இல்லை என்று கூறுகிறார். திமுக கூட்டணியில் 'நீங்கள் இல்லை' என்று சொல்வதற்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஒட்டுமொத்தமாக 'கூட்டணியே இல்லை' என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.


"என்ன அதிக பிரசங்கித்தனம்?" 




தொடர்ந்து கூட்டணிக் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த ஆ.ராசா, "கூட்டணியில் தொடர்கிறோமா, இல்லையா என்பதை அறிவிப்பதற்காக பொதுக்குழுவைக் கூட்டுவதாக ஒருவர் கூறுகிறார். இவர் சென்றால் அப்படியே ஒரு லட்சம் பேர் கூடுவது போல என்ன ஒரு அதிக பிரசங்கித்தனம்?" என்று மிகக் காரசாரமாகச் சாடினார்.


234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி : 

கூட்டணிக் கட்சிகளின் இத்தகைய போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆ.ராசா, திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் மேடையிலேயே ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார்."தலைவரே... இனிமேல் யாருடனும் திமுகவுக்குக் கூட்டணி இல்லை; 'இனி தனித்து நின்று வெற்றிபெறும்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நாம் தனித்து நிற்போம்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.


மதிமுக கண்டனம் :

ஆ.ராசாவின் இந்த பேச்சிற்கு மதிமுக எம்.பி., துரைவைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இது ஒரு வரியில் பேச வேண்டிய விஷயம் கிடையாது. விரிவாக பேச வேண்டும். ஆ.ராசாவின் இந்த கருத்து நாகரிகம் அற்றது. அரசியல் எல்லைகளை கடந்து இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.