திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?

Su.tha Arivalagan
Jan 17, 2026,06:17 PM IST

சென்னை: அதிமுக.,வும் திமுக.,வும் போட்டி போட்டிக் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க துவங்கி விட்டன. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் இப்படி வாக்குறுதிகளை அள்ளி வீசும் போது, புதியதாக வந்து அனைவரிடமும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள தவெக கட்சியின் தலைவர் விஜய் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


அதிமுக, திமுக கூட்டணிகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டன. இன்னும் சில வாரங்களில் கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களும் வெளிவர துவங்கி விடும்.தேர்தல் பணிகளின் அடுத்த கட்டமாக இன்று மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என திமுக.,வும், ஆண்களுக்கும் இலவச பஸ் பயணம், பெண்களுக்கு ரூ.2000 உதவித்தொகை, இரு சக்கர வாகனம் வாங்க மானியம், 100 நாளை வேலை 150 நாளாக அதிகரிக்கப்படும், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் தந்து கான்க்ரீட் வீடு கட்டித் தரும் என்ற ஐந்து வாக்குறுதிகளை அதிமுக.,வும் வழங்கி உள்ளன.




ஏற்கனவே வீடுதோறும் பைக், அரசு வேலை, கார் என பல வாக்குறுதிகளை காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலேயே தவெக தலைவர் விஜய் கூறி இருந்தார். இருந்தாலும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை மிஞ்சு அளவிற்கோ அல்லது ஓரளவிற்கு ஈடு செய்யும் அளவிற்காவது ஏதாவது மக்களை கவரும் வாக்குறுதிகளை அளித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, பிரச்சார ஏற்பாடுகளை செய்வதற்கு குழு என பல குழுக்களை தவெக அமைத்து வந்தாலும். அதிமுக, திமுக கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு விஜய் எந்த தேர்தல் செயல்பாட்டையும் மேற்கொள்ளவில்லை என்பதை பலரின் குறையாக உள்ளது.


இதுவரை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவில்லை என்றாலும், தேர்தல் வாக்குறுதிகளிலாவது அதிமுக-திமுக.,விற்கு கடும் போட்டியை தர வேண்டும் என்பதே தவெக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் ஒரு புறம் கரூர் சம்பவ வழக்கில் சிபிஐ விசாரணை, மற்றொரு புறம் ஜனநாயகன் பட ரிலீசுக்கு எதிரான வழக்கு என சட்ட பிரச்சனைகள், நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, விஜய்யும் அவரது கட்சியினரும் தேர்தல் வேலைகளை எப்படி கவனிப்பார்கள்? அடுத்து என்ன செய்து தங்களின் தொண்டர்களை உற்சாகப்படுத்த போகிறார்கள்? தேர்தலுக்கு என்ன செய்ய போகிறார்கள்? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது.