தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய இரு கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் தற்போது இழுபறி நீடிப்பது தெரிய வந்துள்ளது.
பலத்திற்கு ஏற்ப தொகுதி :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இது குறித்துக் கூறுகையில், கட்சியின் பலத்திற்கு ஏற்ப தகுந்த எண்ணிக்கையிலான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியது மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார். திமுகவுடன் இன்று நடைபெறவிருந்த தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால், எங்களுக்குக் கூடுதல் இடங்களைத் தர முடியாது என்று கூறுவதில் எந்த நியாயமும் இல்லை. கடந்த முறையை விட இந்த முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே எங்களது உறுதியான நிலைப்பாடு," எனத் தெரிவித்துள்ளார்.
தொகுதியைக் குறைக்கச் சொல்கிறார்கள் :
மறுபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களுக்கு வழங்கப்பட்ட எண்ணிக்கையை திமுக குறைக்கச் சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். "கடந்த முறை நாங்கள் 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். இந்த முறை அதைவிடக் கூடுதல் தொகுதிகளைக் கேட்டிருந்தோம். ஆனால், கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்திருப்பதைக் காரணம் காட்டி, கடந்த முறை ஒதுக்கப்பட்டதில் இருந்து ஒரு தொகுதியைக் குறைத்துக் கொள்ளுமாறு எங்களிடம் கூறப்பட்டுள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், தங்களது கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "கூடுதல் தொகுதி வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். எங்களது கூட்டணியில் ஜனநாயக ரீதியாக உரையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த அடிப்படையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம்," எனத் நம்பிக்கைத் தெரிவித்தார்.
எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம் :
கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் கடந்த முறையை விடக் கூடுதல் இடங்களைக் கேட்பதும், திமுக இடங்களைக் குறைக்கச் சொல்வதும் கூட்டணியில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒத்திவைக்கப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் எப்போது தொடங்கும் என்பதும், இடதுசாரிகளின் பிடிவாதத்திற்கு திமுக இணங்குமா என்பதும் வரும் நாட்களில் தெரியவரும். கடந்த வாரம் வரை காங்கிரசால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், இப்போது இடதுசாரிகளால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக - 4, மமக - 2, முஸ்லீம் லீக் - 2, கொங்கு முன்னேற்ற கழகம் - 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்கு முன்னேற்ற கழகம் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் 2 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியிலும் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் தேமுதிக, விசிக.,விற்கு எத்தனை தொகுதிகள், திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறது என்ற விபரங்கள் தெரியவில்லை.