திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியலில் தினம் தினம் பலவிதமான மாற்றங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் வரை அதிமுக.,வில் ஏற்பட்ட குழப்பங்கள் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் திமுக.,விற்கு எதிராக கூட்டணி கட்சிகள் பேச துவங்கி உள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி, தவெக.,வுடன் கைகோர்த்துள்ளது. மதிமுக, தேமுதிக மட்டுமே விலகவில்லை. காரணம் தேமுதிகவை தவெக தரப்பு அணுகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் திமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை தேமுதிக வாங்கி விட்டதும் இன்னொரு காரணம். மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற காரணத்தால் அந்தக் கட்சிக்கு ஆசை இருந்தும் கூட வர முடியாத நிலை.
திமுக கூட்டணியை சேர்ந்த விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளன. இவர்களில் இடதுசாரி கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பிடித்து விட்டன. இடதுசாரிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு என கூறி விட்டன. இதற்கிடையில் கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் குறித்தும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி குறித்தும் திமுக.,வின் ஆ.ராசா தெரிவித்த ஆபாச கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேர்தலுக்கு பிறகு திமுக.,வுக்கு ஒரு நன்றி கூட காங்கிரஸ் தெரிவிக்கவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் தான் தேர்தலில் போட்டியிட்டோம். திமுக.,வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தப்படுத்தப்பட்டோம். நாங்கள் காங்கிரசை போல் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். ஜூன் 27ம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுடன் கூடி கலந்து ஆலோசித்த பிறகே முடிவு செய்வோம் என்றார். இதன் மூலம் மதிமுக, திமுக கூட்டணியில் தொடருமா? அல்லது வெளியேறுமா என்பது ஜூன் 27ம் தேதி தெரிந்து விடும்.
இதற்கிடையில் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த சிபிஎம் பொதுச் செயலாளர் சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் குறித்து ஆ.ராசா பேசிய கருத்துக்கள் கொச்சையானவை. பொறுப்பான பதவிகளை வகித்த அவர் இது போன்று பேசுவது சரியல்ல. இதற்காக தமிழக மக்களிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். தவெக.,வுக்கு ஆதரவு அளித்தது ஏன் என திமுக.,விடம் ஏற்கனவே விளக்கி கூறி விட்டோம். அதற்கு பிறகும் இப்படி பேசுவது சரியல்ல. பிரச்சனைகளின் அடிப்படையில் திமுக கூட்டணியில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் தொடரும் என ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம் என கூறி உள்ளார்.
இதன் மூலம் கூட்டணி கட்சிகள் அனைத்துமே திமுக மீது அதிருப்தியில் இருப்பது வெளிப்பட்டுள்ளது. இதனால் திமுக கூட்டணியில் இந்த கட்சிகள் தொடருமா அல்லது வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.