பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!

Su.tha Arivalagan
Nov 02, 2026,05:29 PM IST

சென்னை:தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடி வரை லஞ்சப் பணம் கைமாறியதாக எழுந்துள்ள புகார், அரசியல் மற்றும் கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.   


ரூ.400 கோடி லஞ்சப் புகார்:


தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதிலும், புதிய அங்கீகாரங்களை வழங்குவதிலும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் பின்னணியில் சுமார் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் கைமாறியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணையில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


அன்பில் மகேசுக்கு போலீஸ் காவல் :




உடல்நிலையை காரணம் காட்டி அன்பில் மகேஷ் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தரப்பில் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நவம்பர் 04ம் தேதி வரை அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   


தொழிலதிபர் சண்முகப்பிரியாவிடம் ஏற்கனவே விசாரணை:


இந்த லஞ்சப் புகாரின் தொடர்பில், ஏற்கனவே பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சண்முகப்பிரியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வழக்கில் தொடர்புடைய பல்வேறு முக்கியத் தகவல்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   


அன்பில் மகேஷ் மனைவி ஜனனிக்கு வலை:


தொழிலதிபர் சண்முகப்பிரியாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது அன்பில் மகேஷின் மனைவி ஜனனியையும் இந்த வழக்கின் கீழ் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர காவல் துறை முடிவு செய்துள்ளது. இந்த லஞ்ச முறைகேட்டில் பணப்பரிமாற்றம் மற்றும் இதர தொடர்புகள் குறித்து ஜனனியிடம் நேரில் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்துள்ளதாக சொல்லப்படும் பிடி அரசகுமார் தனது வாக்குமூலத்தில், தான் ஜனனியின் கணக்கிற்கு லஞ்சமாக பெற்ற ரூ.30 லட்சத்தை அனுப்பியதாக கூறி உள்ளதாக சொல்லப்படுகிறது.   


முத்துக்குமாரை பிடிக்க தீவிரம் :


ஜனனியிடம் நடத்தப்படும் விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கினால் அவரும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான தலைமறைவாக இருக்கும் முத்துக்குமாரை கைது செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.