பிப்ரவரி 22-ம் தேதி முதல்.. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும்.. திமுக அறிவிப்பு

Su.tha Arivalagan
Feb 11, 2026,10:07 AM IST

சென்னை: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்று கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது அதுதொடர்பான அறிவிப்பை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.


திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் காங்கிரஸ் கட்சி தொடர்பாக பல்வேறு சலசலப்புகள் தொடர்ந்து அடிபட்டு வந்தன. அதிக சீட்டுகள் கேட்கிறது, ஆட்சியில் பங்கு குறித்த பேச்சுக்கள், தவெகவுடன் பேசுகிறார்கள் என்று பற்பல செய்திகள் வெளியாகி வந்தன.


சமீபத்தில் டெல்லி டென்று திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்குப் பிறகு பேசிய தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவர் சோடங்கர் கூறுகையில் திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழு இன்னும் அமைக்கப்படாமல் இருப்பது வருத்தம் தருகிறது என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது திமுக தனது மெளனத்தைக் கலைந்துள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:




நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் கழக உடன்பிறப்புகள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது.

இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர ஒன்றியக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என இலட்சக்கணக்கானோர், கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.


ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை, என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.


இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை. மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது.

மேலும் வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.


தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75,000 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன.


வரும் 17-ம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது.


மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களால் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது  சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22-ம் தேதி முதல் தோழமை சுட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த அறிக்கையின் மூலமாக நாங்கள் சும்மா இருக்கவில்லை.. திமுக மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய ஏகப்பட்ட வேலைகளை செய்து வருகிறோம், எல்லாம் முடிந்த பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்பதையும் மறைமுகமாக சுட்டி (குட்டி)க் காட்டியுள்ளது திமுக தலைமை என்பது குறிப்பிடத்தக்கது.